

நகோயா, செப் 27-
உலகத் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள சிவசங்கரி, இந்தியாவின் அனாஹத் சிங்கை வீழ்த்திய வெற்றி மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாகக் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியையும் பெற்றிருப்பது தனக்கு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தத் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் ஒலிம்பிக்கிற்கான தகுதியைப் பெற்றுள்ளேன். இது மிகப்பெரிய விஷயம்.
அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான படியாகவும், நனவான கனவாகவும் இது அமைந்துள்ளது. இருப்பினும், நான் இன்னும் கடுமையாக உழைக்க விரும்புகிறேன்.
“நிச்சயமாக, இன்னும் பல போட்டிகள் வரவுள்ளன. இது பருவத்தின் தொடக்கம்தான். தொழில்முறை ஸ்குவாஷ் சங்கத்தின் (PSA) சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, உலகத் தரவரிசையில் முன்னேறி, பருவத்தின் இறுதிக்குள் உலகின் முதல் மூன்று வீராங்கனைகளுக்குள் இடம்பிடிக்க முயற்சி செய்வேன்,” என்று இன்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்குப் பின்னர் அவர் கூறினார்.
கெடாவில் பிறந்த சிவசங்கரி, உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பதும் தனது கனவுகளில் ஒன்று என்று தெரிவித்தார். அதன்பின்னர், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்லும் இலக்கை நோக்கிச் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார்.

