
கோலாலம்பூர், செப்.30 — KL சென்ட்ரல் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) முனையங்கள் 1 மற்றும் 2க்கு இடையிலான KLIA எக்ஸ்பிரஸ் மற்றும் KLIA டிரான்சிட் ரயில் சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
KL சென்ட்ரலிருந்து KLIA முனையம் 1 அல்லது முனையம் 2க்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் RM55 இலிருந்து RM65 ஆக அதிகரிக்கிறது என Express Rail Link Sdn Bhd (ERL) அறிவித்துள்ளது.
ஆறு முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு வழி பயணக் கட்டணம் RM29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு கட்டண மாற்றம் செய்யப்பட்ட பின்னர், 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கட்டண மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக ERL தெரிவித்துள்ளது.
செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கத்துடனான சலுகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

