சரவணன் சொத்து அறிவிப்பு விவகாரம்:

எம்ஏசிசி தலைமை ஆணையரின் மாறுபட்ட விளக்கங்களால் எழும் கேள்விகள்

கோலாலம்பூர் அக்1 முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனின் சொத்து அறிவிப்பு விவகாரத்தில், அவரது 12 வயது மகன் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அளித்துள்ள விளக்கம் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் வெளியிட்ட தகவலில், டத்தோஸ்ரீ சரவணன், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களில் வெளிநாட்டில் கல்வி பயிலும் ஒரு பிள்ளைக்கு நவம்பர் மாதத்தில் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், மற்றவர்கள் செப்டம்பர் 28ஆம் தேதி எம்ஏசிசி தலைமையகத்திற்கு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த திங்கட்கிழமை டத்தோஸ்ரீ சரவணன் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு சென்றார்.

அப்போது, தனது 12 வயது மகனை இந்த நடைமுறையில் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் என்று சரவணன் கேள்வி எழுப்பினார்.

சொத்து விவரங்களை வழங்குவதற்கும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதற்கும் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்த அவர், சிறுவனை நேரடியாக எம்ஏசிசி தலைமையகத்திற்கு அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த எம்ஏசிசி தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான், சரவணனின் 12 வயது மகனுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

சட்டத்தில் பெரியவர் அல்லது சிறுவர் என்ற தனிப்பட்ட வயது வகைப்பாடு குறிப்பிடப்படவில்லை என்றாலும், 12 வயது சிறுவன் என்பதைக் கருத்தில் கொண்டு எம்ஏசிசி தனது விவேகத்தின் அடிப்படையில் அவருக்கு நோட்டீஸ் வழங்கவில்லை என்று அவர் விளக்கினார்.

மேலும், அந்தச் சிறுவன் நோட்டீஸ் பெறுவதற்காக எம்ஏசிசி தலைமையகத்திற்கு வரவழைக்கப்படவில்லை என்றும், பெற்றோருடன் துணையாகவே வந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

“வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் வழக்கம்போல் பெற்றோருடன் வந்திருக்கலாம்” என்ற வகையிலும் அவர் விளக்கம் அளித்தார்.

முந்தைய அறிவிப்புக்கும் தற்போதைய விளக்கத்திற்கும் என்ன தொடர்பு?

செப்டம்பர் 25ஆம் தேதி சரவணனின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கும் சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12 வயது மகனுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என எம்ஏசிசி விளக்கம் அளித்துள்ளது. இதனால் முந்தைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பிள்ளைகளில் யாருக்கு நோட்டீஸ் வழங்க திட்டமிடப்பட்டது என்பது தொடர்பாக கூடுதல் விளக்கம் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தனது மகன் எம்ஏசிசி தலைமையகத்தில் இருந்ததற்கான காரணம் குறித்து தலைமை ஆணையர் அளித்த விளக்கத்தை டத்தோஸ்ரீ சரவணன் விமர்சித்துள்ளார்.

12 வயது சிறுவனை இந்த விவகாரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை என்று அவர் கூறினார்.

குறிப்பிடத்தக்க விசாரணை அதிகாரங்களைக் கொண்ட ஓர் ஆணையம், சிறுவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தேவையான விவேகத்தையும் உணர்வுபூர்வமான அணுகுமுறையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“வீட்டில் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் அவர் பெற்றோருடன் வந்தார்” என்ற விளக்கம் பொருத்தமற்றது என்றும், அது விவகாரத்தின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருப்பதாகவும் சரவணன் விமர்சித்துள்ளார்.சொத்து அறிவிப்பு தொடர்பான நடைமுறைகளில் எம்ஏசிசி இதற்கு முன்பும் பலருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.ஆனால் சரவணன் குடும்பம் தொடர்பான இந்த விவகாரத்தில் முதலில் வெளியிடப்பட்ட தகவலுக்கும் தற்போது அளிக்கப்பட்ட விளக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு குறித்து தெளிவான விளக்கம் தேவை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.குறிப்பாக சிறுவர்கள் தொடர்பான இதுபோன்ற விசாரணை நடைமுறைகளில் எத்தகைய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles