
பினாங்கு, அக்.5 –
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொன்ன திருவள்ளுவரின் திருக்குறள், இப்போது டிஜிட்டல் உலகின் உச்சகட்டத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவோடு (AI) கை கோர்த்துள்ளது.
மலேசியத் தமிழர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விழா, பினாங்கு கொம்தார் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மனிதகுலத்திற்கு வழிகாட்டும் இப்புதிய முயற்சியின் முக்கிய அம்சங்கள்.
இது மாணவர்களுக்குக் கிடைத்த டிஜிட்டல் கொடை
இத்திட்டத்திற்குத் தலைமைத் தாங்கி, புதிய செயற்கை நுண்ணறிவு திருக்குறள் தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக்குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, மாநில அரசின் முழு ஆதரவை உறுதிப்படுத்தினார்.
தொழில்நுட்பம் மாணவர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், முதற்கட்டமாக பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் 30 கணக்குகள் (Accounts) பதிவிறக்கங்களுக்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகப் பெருமிதத்துடன் அறிவித்தார்.
இது மாணவர்களின் நவீனத் தொழில்நுட்ப அறிவிற்கும் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பாலமாக அமையும். தொடர்ந்து
வாழ்க்கைப் சிக்கல்களுக்கு AI அளிக்கும் ‘வள்ளுவன் வழி’ தீர்வு
இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை ஓராண்டு காலம் தீவிரமாக உழைத்து உருவாக்கிய டாக்டர் சங்கர் வர்மா, இது மனிதகுலத்திற்கு எவ்வாறு பயன்படும் என்பதை விவரித்தார்:
பிரச்சனைகளுக்கான உடனடித் தீர்வு எனது மன அழுத்தம், அறவியல் குழப்பங்கள், வாழ்வியல் சிக்கல்கள், தலைமைத்துவக் கேள்விகள் என எதுவாக இருந்தாலும், இத்தளத்தில் வினா எழுப்பினால் திருக்குறளின் உலகளாவிய வாழ்வியல் அறங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பொருத்தமான விளக்கங்கள் உடனடியாகக் கிடைக்கும்.
எளிய வழியில் இளையோர் கற்றல் என்றால் இன்றைய இளைய தலைமுறையினரும் மாணவர்களும் திருக்குறளைத் தங்களின் அன்றாட வாழ்க்கையோடு எளிதாகத் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள இது வழிகோலும்.
இதன் தொடர் பலனாக தமிழ் அமைப்புகள் மற்றும் சான்றோர்களின் பேர ஆதரவு
பேராசிரியர் செல்லா பெருமாள் (தலைவர், மலாயாப் பல்கலைக்கழகத் திருவள்ளுவர் இருக்கை) திருக்குறளை நவீன உலகிற்குக் கொண்டு சேர்க்கும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பரப்புரைப் பணிகளைத் திருவள்ளுவர் இருக்கை தொடர்ந்து முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.
பரமசிவம் மருதை (தேசியத் தலைவர், மலேசியத் தமிழர் சங்கம்) வரவேற்புரையாற்றிய அவர், திருக்குறளை டிஜிட்டல் உலகிற்கு எடுத்துச் செல்லும் இந்த முதல் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கவிஞர் அருள்தாசன் சமூகத்தில் திருக்குறளின் அவசியம் குறித்து அறிமுகவுரையாற்றினார். மேலும், டாக்டர் சின்னையா, டாக்டர் கோபினா நாயுடு, மரியதாஸ் கோபால், டாக்டர் ஹாஜி ஹபீப், திருமதி ஜரினா உள்ளிட்ட பல முக்கியச் சமூகப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தமிழின் இந்த புதிய வரலாற்றுத் தடத்திற்குத் தங்கள் வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கினர்.

