
காளிதாஸ் சுப்ரமணியம்
செலாயாங், அக் 7-
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். இராஜன் உடல் நலம்
பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ ச்சிங் இன்று மருத்துவமனைக்கு நேரடி வருகை தந்து நலம் விசாரித்தார்.
பி.ஆர். ராஜனின் துணைவியார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் இராஜனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து துணை அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
இந்த சந்திப்பில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் செ வே முத்தமிழ் மன்னன் மற்றும் பெர்னாமா தலைமை செயல் முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல், மருத்துவமனை சிகிச்சை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காசே ஹவானா திட்டத்தின்கீழ் இராஜனுக்கு 3,000 வெள்ளி சிகிச்சை நிதியாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற ஊடகத்தார் சந்திப்பின்போது துணை அமைச்சருக்கும் பெர்னாமா நிறுவனத்திற்கும் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
காசே ஹவானா திட்டத்தின் கீழ் இதுவரை 153 தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது.
இதில் 140 பேர் சங்கத்தின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

