
சிலாங்கூர் இந்தியத் தொழில்முனைவோர் உபகரண உதவித் திட்டத்தின் (i-SEED) கீழ் பயனடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2024-இல் 152 பேருக்கும், 2025-இல் 164 பேருக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு 200 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக i-SEED பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி தெரிவித்தார்.
இவ்வாண்டிற்கான ஒப்புதல்கள் சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை உள்ளடக்கியது என்றும், இதில் உலு லங்காட்டில் உள்ள 21 விண்ணப்பங்களும் அடங்குமென்று அவர் கூறினார்.
சிறு தொழில்முனைவோர் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக, ஐந்து ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் i-SEED திட்டத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பெறுநரின் வியாபாரத் தேவைகளின் அடிப்படையிலேயே உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், உதவிப் பெற்றவர்களின் வியாபார வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதுகுறித்த அறிக்கை மந்திரி பெசாருக்கு சமர்ப்பிக்கப்படும்” என காஜங்கில் சுமதி வடிவேலுவிடம் i-SEED உதவியை ஒப்படைத்த பிறகு மாதவன் கூறினார்.
i-SEED உதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வியாபாரிகள், தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இந்திய சமூகத் தலைவர்கள் மூலமாக கூடுதல் விபரங்களைப் பெற்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் மாதவன் தெரிவித்தார்.
அதே வேளையில், உதவி பெற்றவர்கள் தங்களது வியாபார வளர்ச்சிக்காகத் தங்களுக்குக் கிடைத்த உபகரணங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

