

உலகம் முழுவதும் உள்ள பஹாய் அன்பர்கள் 19 நாட்கள் நோன்புக்குப் பின்னர் தங்களின் நாவ் ருஸ் புத்தாண்டை நேற்று முன்தினம் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பஹாய் மக்களின் நாள்காட்டியில் முதல் நாளாக நாவ் ரஸ் உள்ளது.
இது ஓர் ஆண்டின் வசந்தகாலம் தொடங்கி விட்டதை உணர்த்துகிறது.
இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் பஹாய் மக்கள் 19ஆம் நாள் நோன்புத் துறந்து புத்தாண்டுக்காக ஒன்றுகூடும் போது தொடங்குகிறது.
அவர்கள் புத்தாடைகள் அணிந்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் அடையாளமாக பல்சுவை உணவு உண்டு, ஆடிப் பாடி, விளையாடித் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கழிப்பர்.
நமது பாரம்பரிய முறைப்படி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டதில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டாரும் மதிய உணவு, தேநீர் மற்றும் இரவு உணவுக்கு அழைக்கப்பட்டதாக மலேசிய தேசிய ஆன்மீக மன்றத்தின் செயலாளர், அனீஷா கவீன் கவியரசன் தெரிவித்தார்.
“சிறார்களுக்கான நன்னெறி மற்றும் ஆன்மிகக் கல்வி, 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இளைஞர்களை வலுப்படுத்தும் ஆன்மிகத் திட்டம் ஆகியவற்றை நாங்கள் நடத்தி வருகிறோம்” என்றார் அவர்.
அதோடு மட்டுமின்றி பல பயிற்சி திட்டங்களையும் தாங்கள் மேற்கொள்வதாக அனீஷா கவின் குறிப்பிட்டார்.

