



எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைத்தால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.
அந்நிய தொழிலாளர்கள விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சின் இரண்டு அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு எம்ஏசிசி அழைத்ததால் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று அவர் சொன்னார்.
இந்த விவகாரம் இன்னும் விசாரணையில்தான் உள்ளது.
ஆகவே, அது பற்றி விளக்கம் அளிக்கவும் விமர்சனம் செய்யவும் எனக்கு அனுமதி இல்லை.
இது எல்லாருக்கும் புரியும்.
அதே வேளையில் புகார் இருந்தால் யார் மீது வேண்டுமானாலும் எம்ஏசிசி விசாரணைகளை நடத்தலாம்.
அதற்காக கைது நடவடிக்கைகளை எம்ஏசிசி மேற்கொள்ளலாம்.
விசாரணைக்குப் பின் ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம்.
மனிதவள அமைச்சு விவகாரம் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.
ஆகவே அதற்குள் ஏதாவது ஒரு முடிவை எடுத்து அது பற்றி பேசுவது விமர்சனம் செய்வது கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் இன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் மினாரா பேங் ராக்யாட் மண்டபத்தில் மாபெரும் அளவில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் உரையாற்றியபோது மனித வள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, டான்ஸ்ரீ பாலன், எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல், டத்தோஸ்ரீ தெய்வீகன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா, டத்தோ ஆர் இராமநாதன், நிவாஸ் ராகவன், டத்தோ குமரன், மலேசிய தமிழர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் எம்.ஜே. கணேசன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

