


பூச்சோங், ஏப்.19-
பூச்சோங் கபடிக் குழு ஏற்பாடு செய்த டத்தோ ராணா மற்றும் பூச்சோங் பிரதர்ஸ் கிண்ணக் கபடிப் போட்டியில் சிலாங்கூர் உட்பட இதர மாநிலங்களிலிருந்து ஆண்கள் 20 குழுக்களாக மற்றும் பெண்கள் 6 குழுக்களாகப் பங்கேற்று விளையாடினர்.
இப்போட்டி பூச்சோங், 14ஆவது மைலிலுள்ள ஹான் மிங் சீனப்பள்ளியின் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். இப்போட்டியை ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கம் மாநில ரீதியில் கபடி விளையாட்டுப் போட்டியை வலுப்படுத்த பூச்சோங் கபடி விளையாட்டுக் கழகத்தின் முயற்சிகளைப் பரப்புவதற்கு ஆகும்.
இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட கபடிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் தமது வாழ்த்துக்கள் மற்றும் நன்றியினை பூச்சோங் கபடி சங்கத் தலைவர், ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
இப்போட்டியின் ஆண்களுக்கான பிரிவில் ஏ.டி.எம். ஆல் ஸ்டார் குழு வெற்றியாளர் கிண்ணம், பதக்கம் மற்றும் வெ.5,000 ரொக்கத்தைத் தட்டிச் சென்ற வேளையில், 2ஆவதாக வென்ற பூச்சோங் பிரதர்ஸ் குழு வெ.4,000 ரொக்கம், கிண்ணம் மற்றும் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இதில் 3வதாக வென்ற ஸ்ரீதேவி குழு வெ.1,000 ரொக்கம், கிண்ணம் மற்றும் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இதே போல் 4ஆவதாக வெற்றி பெற்ற பி.எல். குழுவிற்கு வெ.500 ரொக்கம், கிண்ணம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
இதற்கிடையில், பெண்களுக்கான பிரிவில் செமினி கபடிக் குழு வெற்றி வாகை சூடியது. இக்குழுவிற்கு ரொக்கம் வெ.2,500 வழங்கப்பட்ட வேளையில், பி.சி. டைகர்ஸ் குழுவிற்கு ரொக்கம் வெ.1,000 வழங்கப்பட்டதுடன் 3வதாக வென்ற லைன் செவன் குழுவிற்கு வெ.600 ரொக்கம், 4ஆவதாக சௌதர்ன்ஸ் கேர்ல்ஸ் குழுவிற்கு வெ.400 ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த பெண்களுக்கான 4 குழுக்களுக்கும் கிண்ணம் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் ஆண்களுக்கான சிறந்த விளையாட்டாளர்களாக பூச்சோங் பிரதர்ஸைச் சேர்ந்த பூவேந்திரன், ஏ.டி.எம். ஆல் ஸ்டார்சைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் ஜெகன்குமார் ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டனர். அதே போல் பெண்களுக்கான பிரிவில் செமினி கபடிக் குழுவைச் சேர்ந்த பாலஜோதி மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டனர்.
இதனிடையே, செமினி கபடி சங்கத் தலைவர் பாலமுருகன் பேசுகையில், இப்போட்டியை ஏற்பாடு செய்த பூச்சோங் கபடிக் குழுவிற்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுக்குரியது.
வெற்றி தோல்வி என்பது போட்டியில் உள்ள வழக்கமான ஒன்று. இதில் வெற்றி பெற்றக் குழுக்கள் அவ்வெற்றியை அடுத்தடுத்தப் போட்டிகளிலும் தொடர வேண்டும். அதே சமயம் தோல்வி அடைந்த குழுக்கள் தங்களின் முயற்சியை அடுத்தடுத்தப் போட்டிகளில் தொடர வேண்டும் என்றார்.

