

கோலாலம்பூர், ஏப்ரல் 25-
மனிதவள அமைச்சை சேர்ந்த உதவியாளர்கள் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரை விடுப்பில் செல்லுமாறு அனைத்து தரப்பினரும் அழைப்பதை நிறுத்துமாறு கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரை விசாரணையில் யாரையும் குற்றம் சாட்டவில்லை அல்லது விசாரணையை முடிக்கவில்லை என்பதால் இதுபோன்ற கோரிக்கையை விடுப்பது சிக்கலை உருவாக்கலாம்
“சிவக்குமார் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமரின் அறிக்கை தெளிவாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
ஆகையால் யாரும் பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம்.
மனிதவள அமைச்சர் சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும் என்ற அழைப்புகள் ஊகங்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
இது இறுதியில் அமைச்சரவையின் பணிகளுக்கு தீங்கு விளைவிக்கும்
ஏனெனில் விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன,” என்று அவர் சொன்னார்.
சிவகுமாரை விடுப்பில் செல்லுமாறு வலியுறுத்திய ஊழல் தொடர்பான சிறப்புக் குழு உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே ஜி. மணிவண்ணன் இவ்வாறு பதில் அளித்தார்.
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரான ஹசன் கரிம் , ஊழலைப் பற்றிய பக்காத்தான் ஹராப்பானின் கருத்துக்களுக்கு ஏற்ப இது ஒரு சாதகமான நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
மனிதவள அமைச்சர் சிவகுமாரின் வாக்குமூலத்தை எம்ஏசிசி பதிவு செய்துள்ளது.
ஆனால் அவர் இந்த வழக்கில் அவர் சந்தேகத்திற்குரியவர் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஒருவர் வெறும் சாட்சிகளாக மட்டுமே இருக்க முடியும் என்பதால், அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அழைக்கப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்று நாம் கருத முடியாது மற்றும் கருதக்கூடாது.
எம்ஏசிசியை விட முன்னோக்கிச் சென்று ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்
ஊழலை அரசியல் பிரச்சினையாக மாற்றக்கூடாது என்று கூறிய மணிவண்ணன், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க எம்ஏசிசிக்கு இடம் கொடுக்க வேண்டும்.
“எம்ஏசிசி மிகவும் தொழில்முறை அமைப்பு என்று நான் நம்புகிறேன். எம்ஏசிசியுடன் எந்த தொடர்பும் இல்லாத அமைச்சர் என்பதால் சிவகுமாரை விடுப்புக்கு அழுத்தம் கொடுப்பது சரியல்ல என்று நினைக்கிறேன்.
“சிவக்குமார் உள்துறை அமைச்சராக இருந்தாலோ, பிரதமர் துறை அமைச்சராக இருந்தாலோ விடுப்பு எடுக்கச் சொல்வதே பொருத்தமாக இருக்கும், ஆனால் அவர் மனித வளத்துறை அமைச்சர் மட்டுமே.
அவருடைய உதவியாளர்களிடம்தான் விசாரணை நடத்தப்படுகிறதே தவிர, அவர் அல்ல.
PH க்குள் இருப்பவர்களோ அல்லது எதிர்க்கட்சியில் இருப்பவர்களோ, அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சினையை பகுத்தறிவுடன் பார்த்து, MACC மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன்.
“அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன், ஆனால் எல்லை மீறும் ஊகங்களுக்கு அழைப்பு விடுக்கும் எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம்” என்றார்.

