
அண்மையில் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ஒரு லட்சத்து 50,000 பேர் மலேசிய குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் தற்போது பரீசிலனையில் உள்ளது என்று அறிவித்தது.
இந்த எண்ணிக்கையில் பெரும்பான்மையோர் திருமண பந்தத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.
உலகளாவிய அளவில் மலேசியா, பஹாமாஸ் மற்றும் பர்படோஸ் என்ற 3 நாடுகளில் மட்டுமே பெற்றோர்கள் சட்டப்படி திருமணம் செய்திராவிட்டால் தந்தை தன்னுடைய குடியுரிமையை தன் குழந்தைகளுக்கு வழங்க முடியாது.
ஆனால், நேற்று முன்தினம் பஹாமஸ் அரசு அந்நாட்டு ஆண்களுக்கு திருமண பந்தமில்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் தந்தையின் குடியுரிமை வழங்கப்படுமென்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே, இன்றைய நிலவரப்படி சட்டப்படி திருமணமாகவில்லையென்றால் குழந்தைக்கு தந்தையின் குடியுரிமை வழங்கப்படாத நிலை இரு நாடுகளில் மட்டுமே நிலவுகிறது.
இதை பற்றி டிரா மலேசியாவின் தேசிய தலைவராகிய சரவணன் சின்னப்பனிடம் வினவிய போது மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மலேசியராகவோ அல்லது மலேசியாவின் நிரந்தரக் குடியிருப்பாளராகவே இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய குழந்தை இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்த பெற்றோருக்கே இச்சட்டம் தற்போது அமலாக்கபடுகிறது என்றும் அவர் கூறினார்.
இதைப் பற்றி மேலும் விவரித்த அவர்; தற்போது பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு பத்திரத்தில் குடியுரிமை வழங்கப்படாமலிருப்பது இரு காரணங்களினாலே. ஒன்று,
வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் சட்டப்படி தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்யாமல் இருப்பதும்; குழந்தைப் பிறந்தவுடன் அப்பெண்கள் குழந்தையைத் தந்தையிடம் விட்டு விட்டு தலைமறவாகிவிடுவது.
இரண்டாவது, குழந்தையின் அன்னைக்கே குடியுரிமை பிறச்சனை இருப்பதால்; குழந்தைக்கும் குடியுரிமை மறுக்கப்படுவது.
இச்சூழலைப்பற்றி தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை விதைத்து வரும் டிரா மலேசியா நேற்றும் இப்பிரச்சனையின் தற்கால நிலையைப் பற்றி வலைதளங்களில் பதிவிட்டது.
அப்பதிவு நம்முடைய உள்துறை அமைச்சரின் கவனத்தைப் பெற்றுள்ளது. டிரா மலேசியாவின் பதிவிற்கு மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 17 அட்டவணை 2 யின் 3-ஆம் பாகத்தை பரீசிலனைக்குட்படுத்த அரசு தயாராக இருப்பதாக நமது உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் (DATUK SERI SAIFUDDIN NASUTION BIN ISMAIL) கூறியுள்ளார் என்று டிரா சரவணன் தெரிவித்தார்.
பல காலமாக தொடர்ந்து வரும் இக்குடியுரிமை பிரச்சனைக்கு செவி சாய்த்து தீர்வுகாணும் முயற்சியில் இறங்கியுள்ள உள்துறை அமைச்சருக்கு டிரா சரவணன் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

