

புத்ரா ஜெயா மே 8-
மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்காக மூன்று உதவித் திட்டங்களை அறிவித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 10,000 இந்திய மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை ஆண்டுக்கு 2,000 வெள்ளி வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என மித்ரா சிறப்புக் குழுவின் தலைவர் டத்தோ ஆர். இரமணன் அறிவித்துள்ளார்.
இதுதவிர கல்வி அமைச்சில் பதிவு செய்துள்ள தமிழ் பாலர் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4,500 மாணவர்களுக்கு 12 மாதங்களுக்கு தலா 200 வெள்ளி உதவித் தெகை வழங்கப்படும்.
150 வெள்ளி பாலர் பள்ளி கல்வி கட்டணமாகவும் 50 வெள்ளி உணவு உதவித் தொகையகாகவும் வழங்கப்படுகிறது.
மித்ராவின் சமூக திட்டமாக ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் இரத்த சுத்திகரிப்பு மேற்கொண்டுவரும் 900 பேருக்கு உதவித் தொகையாக ஒரு தடவைக்கு 200 வெள்ளி உதவித் தொகை வீதம் மாதத்திற்கு நான்கு முறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மித்ரா நிதி உதவிகள் மக்களிடம் முறையாக சென்றடைய வேண்டும் என்பது எங்களின் கடந்த கால போராட்டமாகும்.
அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மித்ராவுக்கு பத்து கோடி வெள்ளியை ஒதுக்கி உள்ளார்.
ஏழை இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மித்ரா நிதி அனைத்தும் சமுதாயத்திற்கு சென்றடைவதை டத்தோ இராமணன் தலைப்பிலான பணிக்குழு உறுதி செய்யும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

