

புத்ரா ஜெயா மே 23-
நாட்டில் தொழிலாளர் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் மலேசியாவிற்கு முதலீட்டை ஈர்ப்பதற்கும், திறமையான பணியாளர்கள் கிடைப்பது அவசியம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
மனித மூலதன மேம்பாடு என்பது மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை இயக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் ஒரு முக்கியமான செயலாக இருக்கிறது.
ஒரு திறமையான தொழிலாளர்கள் சந்தையானது தொழிலாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும்.
மேலும் அனைத்து மலேசியர்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கவும் பயனடையவும் இது உதவும்.
ஆரம்பத்தில் இருந்தே மனிதவள அமைச்சு (MOHR) மலேசியாவின் தொழிலாளர்களின் திறமைகளை செயல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மனிதவள அமைச்சர் என்ற முறையில் தொழிலாளர் சந்தையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறேன்.
அதன் தேவையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதிலும், மலேசியாவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்
என்று பிசினஸ் டுடேக்கு அளித்த பிரத்யேக நேர்காணலின்போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசியா முழுவதும் போதிய மனிதவளம் இருப்பதை உறுதி செய்ய மனிதவள அமைச்சு தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
கோவிட் 19 தொற்றுநோயின் விளைவுகளால் பல பொருளாதாரத் துறைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர் நோக்கி இருக்கிறது.
ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் இருண்ட காலத்தில் நாட்டை விட்டு வெளியேறினர்.
இதற்கு தீர்வு காண மனிதவள அமைச்சுடன் இணைந்து உள்துறை அமைச்சு விவசாயம், கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டை மீண்டும் திறந்துள்ளது.
மேலும் தொழிலாளர் சக்தியை வலுப்படுத்த ஒரு தீர்வு காணவும் முயற்சிகளை மேற்கொள்கிறது.
அதனால்தான், தொழிலாளர்களை விரைவில் திரும்பக் கொண்டுவருவதற்காக, வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நுழைவைத் தளர்த்தவும், மறுசீரமைக்கவும் அரசாங்கம் தேர்வு செய்தது என்று அவர் சொன்னார்.
ஐந்து துறைகளைத் தவிர, உணவகங்கள் மற்றும் இதர துறைகள் ஆட்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த துறைகளுக்கும் ஆதரவு தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.

