

ஜெனிவா, ஜூன் 12-
சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ. சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று தொடங்கி வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும் ஜெனிவா சர்வதேச தொழிலாளர்கள் உச்சநிலை மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், தொழிற்சங்கவாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மலேசியாவைப் பிரதிநிதித்து மனிதவள அமைச்சர் சிவகுமார், பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 60 ஆண்டுகளாக ஜெனிவாவில் ஐக்கிய சபை ஏற்பாட்டில் இந்த சர்வதேச தொழிலாளர் உச்சநிலை மாநாடு நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்கள் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இங்கு நிறைவேற்றப்படும் தொழிலாளர்கள் மீதான தீர்மானங்களை அந்தந்த நாடுகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதை பின்பற்றும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் மனிதவள அமைச்சர் சிவகுமார் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பல தலைவர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்துகிறார்.
அதே சமயம்,
தொழிற்சங்கவாதியும் பிரபல வழக்குரைஞருமான சிவநேசன் கொரோனோ தொற்று நோய்க்குப் பிறகு ஒழுக்கமான வேலையின் மூலம் சமூக நீதியை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளில் உரையாற்றுகிறார்.
தற்போது
தொழிற்சங்க சட்டம், தொழிலாளர் சட்டம் மற்றும் தொழில் உறவு சட்டம் மலேசியாவில் நடைமுறையில் உள்ளன.
இருப்பினும் 1959 தொழிற்சங்க சட்டம் முழுமையாக திருத்தம் செய்யப்படவில்லை என்று வழக்கறிஞர் சிவநேசன் தெரிவித்தார்.
இரண்டு முறை இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.
3 ஆவது முறையாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
மனிதவள அமைச்சர் சிவகுமார் மிக விரைவில் இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக சிவநேசன் தெரிவித்தார்.
இந்த சட்ட மசோதாவை ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தால் அவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரியாக மாறுவார்கள் என்று அவர் சொன்னார்.
16.6 மில்லியன் தனியார் துறை தொழிலாளர்களின் நலன்களை காக்க மனிதவள அமைச்சர் சிவகுமார் இதை கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

