
புத்ரா ஜெயா ஜூன் 12-
வரும் 2024 ஆம் ஆண்டில் சுக்மா விளையாட்டு போட்டியை சரவாக் மாநிலம் ஏற்று நடத்துகிறது.
சரவாக் சுக்மா போட்டியில் இந்தியர்கள் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுகிறது என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ இன்று அறிவித்தார்.
9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் கோலாலம்பூர் சுக்மா போட்டியில் சிலம்பம் ஒரு கண்காட்சி போட்டியாக இடம் பெற்றது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு சரவாக் சுக்மா போட்டியில் மீண்டும் சிலம்பம் இடம் பெறுகிறது என்ற இனிப்பான செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய தலைவர் ஏ. விஸ்வலிங்கம் தெரிவித்தார்.
சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் நேரடியாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
எங்களுடன் அமர்ந்து பலமுறை பேச்சுவார்த்தையை நடத்திய மனிதவள அமைச்சர் சிவகுமார் சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்கு அயராது பாடுபட்டார்.
அதேபோல் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் இதற்கு பெரும் முயற்சியை மேற்கொண்டார்.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் நகுலேந்திரனும் எங்களுக்கு பக்கப் பலமாக விளங்கினர்.
இறுதியாக 2024 சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறுவதால் 14 மாநிலங்களைச் சேர்ந்த சிவம்ப விளையாட்டாளர்கள் கண்டிப்பாக பங்கேற்பாளர்கள் என்று விஸ்வலிங்கம் தெரிவித்தார்.
எங்களுக்காக குரல் கொடுத்த மனிதவள அமைச்சர் சிவகுமார், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

