
ஜெனிவா, ஜூன் 12-
2024 சரவாக் சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பம், கபடிப் போட்டிகள் மீண்டும் இடம் பெற்றுள்ளது போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான சிலம்பம், கபடியை சுக்மாவில் இணைக்க வேண்டும் நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன்.
கடந்த காலத்தில் இதுதொடர்பில் நாடாளுமன்றத்திலும் கேள்வியை எழுப்பியிருந்தேன்.
கடந்த ஆட்சியில் டத்தோஸ்ரீ வான் அமாட் ஃபைசல் அசுமு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார்.
அவரிடம் இந்த பிரச்சினை கொண்டு சென்றேன்.
இதனால் கடந்த சுக்மா போட்டியில் கபடி – சிலம்பம் கண்காட்சி போட்டியாக இடம் பெற்றது.
இந்நிலையில் 2024ஆம் சரவாக் சுக்மாவில் இவ்விரு போட்டிகளும் இடம் பெறவில்லை என அறிவிப்புகள் வந்தது.
இந்த இரு விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகளும் என்னை சந்தித்து பேசினர்.
அவர்களை அழைத்துச் சென்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
அதே வேளையில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த விளையாட்டு மன்ற அமைச்சரவை கூட்டத்திலும்
இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.
எந்தவொரு விளையாட்டும் இன் ரீதியாக ஒதுக்கப்படக் கூடாது.
அனைவருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஆணித்தரமாக கூறினேன்.
இதன் பயனாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ 2024 சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுகிறது என்று மகிழ்ச்சியான அறிவிப்பை செய்துள்ளார் என்று அவர் சொன்னார்.
இதனிடையே சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்கு அயராது பாடுபட்ட மனிதவள அமைச்சர் சிவகுமார், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமிக்கு கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

