
புத்ராஜெயா, ஜூன் 17-
உலகம் முழுவதும் ‘அன்னையர் தினம்’ என்பது காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது தந்தையர் தினமும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது.
அந்த வகையில் நாளை உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
தந்தையர் தினம்’ என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை.
ஆம், ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!
நீ தந்தை ஆகும் வரை, உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது.
தந்தையின் மனதில் கஷ்டங்கள் அனைத்தும் புதைந்துவிடுவதால் அவை வெளியில் தெரிவதில்லை.
அகிலத்தை இடுப்பில் வைத்து அன்னை காட்டினால், தனக்கும் மேலே தூக்கி, உலகை காண்பிக்கும் ஒப்பற்ற உறவு தான் தந்தை.
அன்றைய காலகட்டத்தில் நம் தந்தையர்கள் நம்மை எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

