
புத்ரா ஜெயா ஜூன் 22-
உள்நாட்டு உயர்கல்விக்கூடங்களில், மருத்துவ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசாங்கம் நிலை நிறுத்தியுள்ளதாக, உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் அறிவித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
ஆண்டுதோறும், நான்காயிரத்து 820 பேர் மருத்துவ பட்டப் படிப்பை மேற்கொள்ள சுகாதார அமைச்சு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
எனினும், உண்மையில் மருத்துவ துறையில் பட்டப்படிப்பை தொடரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை வெறும் நான்காயிரம் பேர் மட்டுமே என்பதை அமைச்சர் காலிட் நோர்டின் சுட்டிக் காட்டினார்.
அதனால், மருத்துவ பட்டப்படிப்பிற்காக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு நிலைநிறுத்தப்படுமென அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
அதோடு, நாட்டில் மருத்துவ பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான கட்டணமும் குறைவாகும்.
இட ஒதுக்கீட்டை குறைத்தால், மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி வெளிநாடுகளில் மருத்துவ கல்வியை தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அது போன்ற சூழலை தவிர்க்கவும் அம்முடிவு உதவுமென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பு மருத்துவ துறையில் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.
மேலும் உள்ளூர் உயர் கல்வி கூடங்களில் இவர்கள் மருத்துவம் பயில்வதால் பெற்றோரின் சுமையும் பெரும் அளவில் குறையும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

