

கோலாலம்பூர் ஜூன் 23-
HRD Corp நிறுவனம் அனைத்து மைல்கற்களையும் தாண்டி 2022 ஆம் ஆண்டில் சாதனை படைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
HRD Corp 1993 இல் தொடங்கப்பட்டதிலிருந்து முந்தைய அனைத்து மைல்கற்களையும் தாண்டி 2022 ஒரு சாதனை படைத்த ஆண்டாகும் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
HRD Corp தலைவர் டத்தோ ராஜசேகரன் மற்றும் அதன் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் டாவூட் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
HRD Corp வெற்றியைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்.
மலேசியாவில் மனித மூலதனத்தின் சிறப்பை மேம்படுத்துவதில் HRD Corp தொடர்ந்து முக்கியப் பங்காற்றும் என்று நான் நம்புகிறேன் என்றார் அவர்.
கோலாலம்பூர் கிராண்ட் ஹயாட் தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்ற 22ஆவது HRD Corp ஆண்டு பொதுக்கூட்டத்தை மனிதவள அமைச்சர் சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
டிசம்பர் 2022 இல் முடிவடைந்த நிதியாண்டில், HRD Corp அதன் சிறந்த செயல் திறனுடைய ஆண்டைப் பதிவு செய்துள்ளது.
RM1.809 பில்லியன் லெவியை பதிவு செய்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2021 இல் இருந்து HRD Corp அதன் வசூலை இரட்டிப்பாக்கியுள்ளதும் பாராட்டுக்குரியது .
பயிற்சி இடங்களில் 1.497 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது.
இது முந்தைய ஆண்டை விட 164% அதிகமாகும்.
HRD Corp இல் பதிவுசெய்யப்பட்ட முதலாளிகளின் எண்ணிக்கையையும் 81,706 ஆக அதிகரித்ததுள்ளது.
முந்தைய ஆண்டை விட 21.72% குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
மேலும் 4.383 மில்லியன் ஊழியர்களை இது உள்ளடக்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, HRD கார்ப் நிறுவனத்தில் 33,300 பதிவு செய்யப்பட்ட முதலாளிகள் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.
மலேசியாவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் வளர்க்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு வலுவான பணிச்சூழலை உருவாக்க மனிதவள அமைச்சு பாடுபடுகிறது.
இதில் வேலை வாய்ப்புச் சட்டம் 1955 (சட்டம் 265) திருத்தப்பட்டு நெகிழ்வான பணி ஏற்பாடுகள், குறைக்கப்பட்ட வேலை நேரம் மற்றும் மகப்பேறு விடுப்பு ஆகியவை அடங்கும்.
இந்தத் திருத்தம் RM1,500 குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்த வழிவகுத்தது.
இது 2.15 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் கௌரவமான சம்பளத்தைப் பெற உதவியது.
அவர்களை வறுமைக் கோட்டிற்கு மேலே உயர்த்தியுள்ளது என்று அவர் சொன்னார்.

