

கோலாலம்பூர் ஜூலை 1-
மலேசியர்கள் தங்களது கல்வி மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்ள மாதத்தில் ஒரு புத்தகத்தை படித்தால் மிகவும் நல்லது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
ஒரு மாதத்தில் ஒரு புத்தகத்தை படிக்க முடிந்தால் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் புத்தகத்தை படிக்கும் ஆர்வம் தானாக பிறக்கும்.
ஆகவே மலேசியர்கள் இதை ஒரு லட்சியமாக கருதி மாதத்தில் ஒரு புத்தகத்தை படிக்க முன் வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் 20 ஆம் ஆண்டு ஜெயபக்தி விழாவில் மனிதவள அமைச்சர் சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கும் அரசியல்வாதிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாலைகளுக்கு பதில் புத்தகங்களை அன்பளிப்பு செய்தால் மிகவும் நல்லது என்று அவர் சொன்னார்.
ஜெயபக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்ற இந்த புத்தக விழாவில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், மலேசிய ஹராப்பான் மலேசிய சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி, டத்தின் ஷீலா, மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சுதர்சன், மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன், கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை , டாக்டர் மகேந்திரன், லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் தலைவி ஷினா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

