


கோலாலம்பூர் ஜூலை 1-
வாசிப்பு பழக்கம் ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கியமானது.
நல்ல அறிஞர்களையும் கல்விமான்களையும் உருவாக்குவது புத்தகங்களே என்பதால் மலேசியர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் 20 ஆம் ஆண்டு மாபெரும் புத்தக கண்காட்சி விழாவில் மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று கலந்து சிறப்பித்தார்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் தொடர்ந்து உரையாற்றிய மனிதவள அமைச்சர் சிவகுமார்,
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒரே தமிழ் புத்தகாலயமான ஜெயபக்தி பதிப்பகம் 1980ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆரம்ப, இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற தரமான நூல்களை வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது என்றார்.
இந்திய சமுதாய நலன் கருதி தமிழ்ப்பள்ளிகளிலும் கழகங்களிலும் மட்டுமின்றி சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது ஜெயபக்தி.
இந்திய மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைவாக இருந்ததால் அதை ஊக்குவிப்பதற்காக 1992ஆம் ஆண்டு முதல் மாணவர் இதழான குயில் மாத இதழை வெளியிட்டது ஜெயபக்தி பதிப்பகம்.
அதுமட்டுமில்லாமல், 1994ஆம் ஆண்டு ஜெயபக்தி பதிப்பகம் மின்னல் எப்.எம் உடன் இணைந்து ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் கேள்வி மேடை என்ற புதிர்ப்போட்டியை 10ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியுள்ளது .
1988ஆம் ஆண்டு முதல் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற முதல் தேசிய அளவிலான புத்தகக் கண்காட்சியில் ஜெயபக்தி பதிப்பகம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அன்று தொடங்கி, ஜெயபக்தி ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் புத்தகக் கண்காட்சியை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறது.
அவ்வகையில் ஜூலை மாதம் வாசிப்பு மாதம் என்பதை முன்னிட்டு 20ஆம் ஆண்டாக ஜெயபக்தி பதிப்பகம் இம்மாபெரும் புத்தகக் கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன்.
“நாலும் தெரிய நாளும் படிப்போம்” “வாசிப்பு நமது சுவாசிப்பு” என்ற கருப்பொருளின் வழி ஒவ்வொரு மாணவரும் வாசிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஜெயபக்தி உரிமையாளர் டத்தோ டாக்டர் செல்வராஜ் வலியுறுத்தி வருகிறார் .
இதனை, மாணவர்கள் கருத்தில் கொண்டு அனுதினமும் குறைந்தது ஒரு நாள் ஒரு பக்கத்தையாவது வாசிக்க வேண்டும் என்றார் அவர்.

