


ஈப்போ, செப் 6 –
பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தார். அப்போது எல்லாம் எதையும் செய்யவில்லை.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் பணிபுரிய அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று 14 ஆண்டுகளாக இந்திய வணிகர்கள் அமைச்சரை நோக்கி படையெடுத்து முறையிட்டனர்.
அப்போது எல்லாம் இதற்கு தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இப்போது மனிதவள அமைச்சராக இருக்கும் நான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன்.
ஆனால் என்னால்தான் இதற்கு தீர்வு காண முடிந்தது என்று இப்போது ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பது ஏன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேள்வியை முன் வைத்தார்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் அந்நிய தொழிலாளர் வேலை செய்வதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதி வழங்கி விட்டார்.
ஒன்பது மாதங்களாக நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அந்த காலக்கட்டத்தில் வெறுமனமே இருந்து விட்டு தற்போது என்னால் தான் தீர்வு பிறந்தது என்று மலிவான அரசியல் நாடகம் செய்வது கேவலமாக இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்து இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு எவ்வளவு
அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பது பற்றி விவாதிக்கப்படும்.
இதன் வாயிலாக இந்திய பாரம்பரிய வணிகர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படும் என்றார் அவர்.
இன்று ஈப்போ லிட்டல் இந்தியா வர்த்தக சங்கமும், பேராக் இந்திய வர்த்தக சபையும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் மனிதவள அமைச்சர் சிவகுமார் கலந்து கொண்டார்.
பேராக் இந்திய வர்த்தக சபையின் தலைவர் பா. ரவிசங்கர் மற்றும் லிட்டல் இந்தியா வர்த்தக சங்க தலைவர் பா. கலா மற்றும் அவர்களது செயலவையினர் கலந்து சிறப்பித்தனர்.
வி.கே. கல்யாணசுந்தரம் ஜவுளி கடை, டி.ஸ். நகைக்கடை, ஏ1 நிறுவனம் மற்றும் ஜாயின் நகைக்கடை இதர கடைகளுக்கும் நேரடியாக வருகை புரிந்து அவர்களின் தேவைகளை அமைச்சர் சிவகுமார் நேரில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிட்டில் இந்தியா ஈப்போ பல்வேறு வகையான வணிகங்களைக் கொண்ட ஈப்போ நகரில் ஒரு முக்கியமான வணிக மையமாகும்.
இந்திய தேசத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த பகுதி, இந்திய மக்களின் கலாச்சார மையமாகவும் உள்ளது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் குறிப்பிட்டார்.

