

கிள்ளான் செப் 9 –
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளைச் சேர்ந்த இந்தியர்கள் எதிர் நோக்கிய 14 ஆண்டுகால பிரச்சனையை 9 மாதத்தில் தீர்வு கண்டதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
மனிதவள அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதும் என்னை வந்து சந்தித்த இந்திய பாரம்பரிய தொழில் துறைகளைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள், முடித்திருத்தும் நிலைய உரிமையாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் எப்படியாவது எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி கோரிக்கையை முன் வைத்தனர்.
14 ஆண்டுகால பரிதவிக்கிறோம். உதவி செய்யுங்கள். இல்லையேல் கடைகளை இழுத்து மூட வேண்டியதுதான் என்று அவர்கள் உருக்கத்துடன் தங்களது கஷ்டங்களை தெரிவித்தனர்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது.
ஆகவே அமைச்சரவை கூட்டத்தின் மூலம் இதற்கு அனுமதி பெற்று தர கடந்த ஒன்பது மாதங்களாக கடுமையாக போராடினேன்.
உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இரு அமைச்சுகளின் ஒப்புதலை பெற்றேன்.
இறுதியாக நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்து முழு அனுமதியை பெற்றேன்.
முதல் கட்டமாக இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாதங்களாக நான் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக இதை கருதுகிறேன் என்று நேற்று கிள்ளான் செந்தோசாவில் நடைபெற்ற ஜெலாஜா மடானி மனிதவள அமைச்சின் மக்கள் சந்திப்பு நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

