
கோலசிலாங்கூர் நகரில் 4 ஆவது மைலில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நன்னீராட்டு பெருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத் தலைவர் பரமசிவம், உதவித் தலைவர் யூகனேஸ் ராஜ், செயலாளர் அவனேஸ், பொருளாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த 1900 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தை நகரத்தார் கட்டி வழிபட்டு வந்தனர்.
2016 ஆம் ஆண்டில் இளைஞர்கள் இந்த ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்தி முறைப்படி ஆர்ஓஎஸ் -இல் பதிவு செய்தனர்.
இப்போது இந்த ஆலயம் பழனி ஆண்டவர் திருக் கோவில் என்று பெயர் மாற்றம் கண்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
ஐந்து லட்சம் வெள்ளியில் திருப்பணி செய்யப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நன்னீராட்டு பெருவிழா வில் மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று கலந்து சிறப்பித்தார்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இந்த ஆலயத்திற்கு தமது சார்பில் 50,000 வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.
கோலசிலாங்கூர் மண்ணின் மைந்தர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராஜசேகரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

