

காடேக், அக் 8-
மலாக்கா டாலாங் கெமுனிங் காடேக் தோட்டத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருப்பணி வெற்றி பெற முழு ஆதரவு வழங்குவேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது பத்து லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு வருகிறது.
திருப்பணி வேலைகள் முடிவடைய இன்னும் ஒன்றரை லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக ஆலயத் தலைவர் கணேசன் கோரிக்கை முன் வைத்துள்ளார்.
இந்த ஆலயத்தின் நிலம் சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமானது.
இந்த நிலம் ஆலயத்திற்கு கிடைக்க உதவ வேண்டும் என்றும் ஆலயத் தலைவர் கணேசன் கேட்டுக் கொண்டார்.
ஆலய நிர்வாகம் முன் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப முதலில் நிலம் ஆலயத்திற்கு கிடைக்க
ஐந்து பேர் கொண்ட குழுவை அமைச்சர் சிவகுமார் அமைத்தார்.
இந்த குழுவில் காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், கோவில் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் கொண்ட குழு முதல் கட்டமாக சைம் டார்பி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் அவர்.
நிலம் ஆலயத்தின் பெயரில் மாற்றப்பட்டதும் திருப்பணிக்கு தேவையான நிதியை பெற்றுத் தர வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டில் மகா கும்பாபிஷேகத்தை நடத்த திட்டமிட்டிருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கும் முழு ஆதரவு வழங்குவேன் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற குணசேகரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

