
பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் விவகாரம் தொடர்பில் பல உலக நாடுகள் தங்களின் கருத்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றன.
அதே போன்று மலேசியாவும் பாலஸ்தீனத்திற்கான ஆதரவை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது. பாலஸ்தீன
அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து கண்டித்தும் வருகிறது.
ஆனால், இந்த விவாகரத்தில் மலேசியர்கள் சிலர் அதிகப்படியாக நடந்துக் கொள்வதும், எல்லை மீறும் வகையிலான கருத்துகளை வெளிப்படுத்துவதும் முகம் சுளிக்கச் செய்கிறது.
பாலஸ்தீனத்திற்கு மலேசியர்கள் ஆதரவு தெரிவிப்பது தவறல்ல. ஆனால் அது கன்னியத்துடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகும்.
நேற்று, பள்ளி ஒன்றில், மாணவர்கள் கைகளில் விளையாட்டு துப்பாக்கிகளை கொடுத்து பாலஸ்தீன கொடிகளை பறக்க விட்டு, அவர்களை பயங்கரவாதிகளை போல ஆசிரியர்கள் அலங்கரித்துள்ளனர்.

மாணவர்கள் மத்தியில் இது போன்ற செயல்களை தவிர்க்க
வேண்டிய ஆசிரியர்களே அதனை ஆதரிப்பது வேடிக்கையாக உள்ளது. அப்பள்ளியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமரோ, இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என லேசாக பேசியுள்ளார்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் நஞ்சை விதைக்க வேண்டாம் என பல சமூக ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக கல்வி கூடங்களில் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி 3 நவம்பர் வரை
சிறப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் fadlina sidek கூறியுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட பள்ளி விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் ஓர் காணொளி வாயிலாக அவர் விளக்கமளித்துள்ளார்.
நமக்கே இங்கு பல பிரச்சினைகள் உண்டு. அதற்கு முதலில் தீர்வு காணும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாகும்.
கல்வி அளவில் நம் மாணவர்களுக்கு பல மேம்பாடுகளை செய்வதை விடுத்து போராட்ட உணர்வுக விதைக்கும் நடவடிக்கைகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.

