எதிர்ப்பார்த்ததைவிட இந்தியர்களுக்கு அதிகமாகவே நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது ! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

ஈப்போ, அக். 31-
பேராக் மாநில தமிழ் ஊடகவியலாளர்க்குப் பேரா மாநில ஜனநாயக செயல் கட்சி ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நாட்டின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் முன்வைப்பதில் தமிழ் நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களும் அவற்றின் செய்தியாளர்கள் ஆற்றும் பங்கினை அவர் பாராட்டினார்.

ஆட்சி அமைத்த சுமார் பத்து மாதங்களில் ஒற்றுமை அரசாங்கம் இந்தியர்களுக்காக பல நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளுக்காக 20 மில்லியன் ஒதுக்கப்பட்டபோதிலும் பல்வேறு வகைகளில் அந்த நிதி 30 மில்லியனுக்கும் மேல் வந்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

அதே வேளையில் முன்பு அரசாங்கப் பள்ளிகளின் கழிப்பறைகள் மட்டுமே சீரமைக்கப்பட்டன. ஆனால் இப்போது பகுதி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இது தொடர வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதன் வழியாக நாட்டிலுள்ள எல்லா தமிழ்ப் பள்ளிகளும் பயனடையும்.

இது தவிர, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிலம்பம், கபடி ஆகிய நமது பாரம்பரிய விளையாட்டுகள் சுக்மாவில் இடம் பெறவேண்டும் என்னும் போராட்டத்திற்கு இப்போது தீர்வு பிறந்துள்ளது.

வரும் 2024 சுக்மா போட்டியில் பதக்கம் பெறும் போட்டி விளையாட்டுகளாக இந்த இரண்டு விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன.

அதுபோலவே, பணியாளர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் அபாயத்திலிருந்த இந்திய மற்றும் இந்திய முஸ்லிம் உணவகங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு பிறந்துள்ளது.

உணவகங்கள், நகைகடை, துணிக்கடை போன்றவற்றில் பணிபுரிய வெளிநாடுகளிலிருந்து 7,500 பணியாளர்களைக் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் சிவகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வீடமைப்பு உராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங், பேரா மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் ஆகியோரும் உரையாற்றினர்.

பேராக் மாநில ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களான பவானி மற்றும் துளசி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles