

பாங்கி, நவ.1
ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய தேசிய மனித வளக் கொள்கையை மனிதவள அமைச்சு (கேஎஸ்எம்) உருவாக்கி வருகிறது என்று அமைச்சர் வ. சிவக்குமார் தெரிவித்தார்.
தேசிய மனித வளக் கொள்கையை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.
2019 முதல் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு இருந்தாலும், அது இன்னும் முடிக்கப்படவில்லை என்று இன்று பாங்கியில் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தில் (NIOSH) ஆரோக்கியமான மனம் வளமான வாழ்க்கைத் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இதய நோய்க்கு அடுத்தபடியாக மலேசியாவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் இரண்டாவது பெரிய உடல்நலப் பிரச்சனையாக இருப்பதால், இந்தக் கொள்கையை உருவாக்குவது ஒரு முக்கியமான படியாகும் என்று அவர் சொன்னார்.
எனவே சிக்கலைச் சமாளிக்க தலையீட்டு நடவடிக்கைகள் அவசியம் தேவைபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
பணியிடத்தில் மனநலம் குறித்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த அவர், பணியிடத்தில் மனநல வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது.
செவித்திறன் குறைபாடு, பாக்டீரியா தொற்று மற்றும் நுரையீரல் நோய் போன்ற பிற தொழில் சார்ந்த நோய்களுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு ஒரே ஒரு உளவியல் வழக்கு மட்டுமே பதிவாகியுள்ளதாக 2022 தேசிய தொழில்சார் நோய் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்றார் அவர்.
பணியிடங்களில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் உளவியல் மன அழுத்தம் தொடர்பான வழக்குகள் இன்னும் அதிகமாக இருக்கிறது.
இந்த சவாலை சமாளிக்க, NIOSH ஊழியர்களின் உதவித் திட்டம் (Employee Assistance Programme) உட்பட பல முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சமாளிக்க உதவும், இதனால் அவர்களின் வேலையில் செயல்திறன் பாதிக்கப்படாது,” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr. Zaliha
Mustafa மற்றும் NIOSH தலைமை செயல் முறை அதிகாரி ஹாஜி ஆயோப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

