

காஜாங், நவ 4-
நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கம் மானியம் முறைப்படி சென்றடைவதை தொடர்ந்து கண்காணிப்பேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
2024 பட்ஜெட்டில் நாட்டில் உள்ள அனைத்து மொழி பள்ளிகளுக்கும் மிகப்பெரிய மானியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுக்கி உள்ளார்.
2023 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மானியத்தில் கடந்த காலங்களைக் காட்டிலும் தமிழ்ப் பள்ளிகளுக்கு கூடுதல் மானியம் கிடைத்துள்ளது.
அந்த வகையில் 2024 பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் நியாயமான நிதி கிடைப்பதை தொடர்ந்து கண்காணித்து வருவேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் தொட்டு இன்றுவரை தமிழ்ப் பள்ளிகளுக்காக துணிந்து குரல் கொடுத்து வருகிறேன் என்று இன்று காஜாங்கில் ஜெயம் நம்நாடு இயக்கத்தின் சார்பில் வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதன் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

