20ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியில் சுங்கை – பீடோர் பகுதிகள் உருமாற்றம் கண்டுள்ளன – சிவநேசன் தகவல்!!

சுங்கை,நவ20:

கடந்த 20 ஆண்டுகளில் சுங்கை மற்றும் பீடோர் நகரங்கள் பெரும் உருமாற்றத்தையும் வளர்ச்சியையும் நோக்கி பயணித்திருப்பதாக சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.புதிய வீடமைப்புத் திட்டங்களும் மேம்பாடுகளும் துரித நிலையில் உயர்ந்திருப்பதோடு மட்டுமின்றி வளர்ச்சியையும் மேம்பாட்டையும் சுங்கை சட்டமன்ற தன்வசப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மக்கள் வாழ்வதற்கான நன் சூழலை கொண்ட வாழ்விடமாக சுங்கை,பீடோர் வட்டாரங்கள் திகழ்வதாகவும் குறிப்பிட்ட அவர் அமைதியான,ஆரோக்கியமான,அடிப்படை வாழ்வாதார தேவைகள் கொண்ட வசிப்பிடமாக இவ்விரு நகரமும் திகழ்வதாக கூறிய அவர் காலத்திற்கு ஒப்ப மேம்பாட்டுப் பணிகள் இங்கு அரசாங்கத்தாலும் தனியார் நிறுவனங்களாலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்தக்காலங்களில் இவ்வட்டாரங்களில் விரல்விட்டு எண்ணும் அளவில் ஒருசில தாமான் குடியிருப்பு பகுதிகளே இருந்து வந்த நிலையில் நடப்பில் முதன்மை சாலைகளை ஒட்டியே நிறைய குடியிருப்பு பகுதிகள் உருவெடுத்து விட்டதையும் சுட்டிக்காண்பித்த அவர் பீடோரில் புதிய நவீனத்துவ வணிகத்தலம் விரைவில் உருவெடுக்கவிருப்பதையும் அறிவித்தார்.

இங்குள்ள தாமான் இம்பியானா வீடமைப்பு திட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து பேசுகையில் மாநில மனிதவளம்,சுகாதாரம்,இந்தியர் நலவாழ்வும் மற்றும் ஒருமைப்பாடு பிரிவின் ஆட்சிகுழு உறுப்பினருமான அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும்,மாநில அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களும் செயல்பாடுகளும் இவ்வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதையும் குறிப்பிட்ட அவர் வருங்காலத்தில் வேலை வாய்ப்புகளும் இங்கு அதிகமான தேவைகளை கொண்டிருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் தஞ்சோங் மாலிம் புரோட்டோன் சிட்டியில் புரோட்டன் கார் நிறுவனத்தின் பெரிய தொழிற்சாலை இங்கு அமையவிருக்கும் நிலையில் சுமார் 50ஆயிரம் தொழிலாளர்கள் தேவையாக இருக்கும் என்பதையும் நினைவுக்கூர்ந்த அவர் சுங்கை மற்றும் பீடோர் வட்டாரங்களிலும் வருங்காலங்களில் வீடமைப்புகளோடு தொழிற்சாலைகளும் விரிவடைய வாய்ப்பு உள்ளதையும் அவர் மறுக்கவில்லை.

முன்னதாக,பேரா மாநில அரசாங்கம் ஊக்குவிக்கும் தொழில்திறன் கல்வியில் சுங்கை,பீடோர் வாழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தத்தம் வீட்டுப்பிள்ளைகளை அக்கல்வி சார்ந்து சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்ள பெற்றோர்கள் தனித்துவ அக்கறைச் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இவ்வட்டார மாணவர்கள் தங்களின் சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சுங்கையில் தொழில்திறன் கல்வி பயிற்சி முகாமை தாம் தொடங்கியிருப்பதாகவும் அதுகுறித்த ஆலோசனைகள் பெற தனது சேவை மையத்தை அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

வருங்கால இளைஞர்களை திறன் மிக்கவர்களாகவும் தொழில்திறன் தேர்ச்சி பெற்றவர்களாகவும் உருவாக்க பெரும் இலக்கு கொண்டிருக்கும் நிலையில் அந்த வாய்ப்பினை நன்நிலையில் பயன்படுத்தி இளைஞர்கள் நம்பிக்கையான எதிர்காலத்தை அமைத்து கொள்ளவும் வேண்டும் என சிவநேசன் கேட்டும் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles