
கோலாலம்பூர்,நவ20
மூடா கட்சி கொண்டிருக்கும் வெளிப்படையான அணுகுமுறையும் கொள்கை வரையறையும் கட்சி தொடங்கப்பட்டு குறுகியக்காலத்திலேயே அதில் 80 ஆயிரம் உறுப்பினர்கள் இணைந்திருப்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாக அக்கட்சியின் தற்காலிக தலைவர் மாண்புமிகு அமிரா அய்ஷா தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாநில நிலையிலான பொறுப்பாளர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் இவ்வாறு தெரிவித்த அமிரா அய்ஷா இன்னும் அதிகமானோர் கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் ஜனநாயக நிலையில் இனம்,மதம் கடந்து ஏற்றத்தாழ்வை வேரறுத்து மக்களின் உரிமைக்காகவும் தேவைக்காகவும் மட்டுமின்றி மக்களின் குரலாக ஒலித்து கொண்டிருக்கும் மூடா கட்சி இளம் தலைமுறையின் முதன்மை தேர்வாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளையில்,கட்சியில் இணைவதற்கான விண்ணப்பம் திறக்கப்பட்டிருப்பதாகவும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் இக்கட்சியில் இணைவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறும் அமிரா அய்ஷா கட்சியின் உருமாற்று சிந்தனையும் நீண்டக்கால தூரநோக்கு சிந்தனையும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் மூடா அதன் செயல்பாட்டையும் அதன் நிலைப்பாட்டையும் கொண்டிருக்கும் சாத்தியத்தை உருவாக்குவதையே தாங்கள் இலக்காக கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்,கட்சியை வலுப்படுத்துவதற்கான அனைத்து அடிப்படை பணிகளும் ஆக்கப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டதாகவும் அது மக்களிடையே,குறிப்பாக இளையோரிடம் பெரும் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் கூறும் அமிரா நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் நம்பிக்கையான ஓர் அரசியல் கட்சியாக மூடா வேகமாக வளர்ந்தும் வருவதாக கூறினார்.
இந்நிலையில்,கட்சி அதன் வெளிப்படையான போக்கு,நேர்மையான தன்மை மற்றும் ஜனநாயகத்தின் மாண்பு ஆகியவற்றை மெய்ப்பிக்கும் வகையில் வருகின்ற 2024ஆம் ஆண்டில் அதன் முதல் கட்சி தேர்தலை நடத்துவதற்கும் ஆவணம் செய்திருப்பதாக கூறினார்.இதன் மூலம் கட்சியின் வெளிப்படையான அணுகுமுறையை அதன் உறுப்பினர்களுக்கு உணர்த்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக கட்சியின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்று 100நாளை எட்டியுள்ள நிலையில் கட்சியின் மாநில,தேசிய நிலையிலான பொறுப்பாளர்களை சந்தித்து கட்சியை வலுப்படுத்துவது,அடுத்தக்கட்ட நகர்வு,இலக்கு என பல்வேறு விடயங்கள் குறித்து நடைபெற்ற சந்திப்பில் ஆராயப்பட்ட நிலையில் மூடா கட்சி நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து மலேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணிப்பதை இது உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

