பாக்காத்தான் ஹராப்பானில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிர்காலம் இல்லையா? தோல்வியுற்ற இராமசாமியின் புலம் அது!!சிவநேசன் சாடல்!!

ஈப்போ,நவ20:

ஜசெக மற்றும் கெஅடிலான் அங்கம் வகிக்கும் பாக்காத்தான் ஹராப்பானில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறதா என பினாங்கு இராமசாமியின் கேள்வி தோல்வியுற்றவர்களின் புலம்பல் என சாடினார் பேரா மாநில ஜசெக உதவித்தலைவரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன்.

இராமசாமியின் இக்கூற்று வேடிக்கையாகவும் அதேவேளையில் அவரது அரசியல் முதிர்ச்சியற்ற போக்கினையும் எடுத்துக்காட்டுவதாகவே கூறிய சிவநேசன் கட்சியின் 2005இல் இணைந்து 2008இல் சட்டமன்றம்,நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியோடு மாநில துணை முதல்வராகவும் பதவியை அலங்கரித்த இராமசாமி மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு பாக்காத்தான் ஹராப்பானில் எதிர்காலம் இருக்கிறதா என புலம்புவது மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டு தன்னை ஹீரோவாக காட்ட முயலும் ஒரு கபடநாடகமே என்றார்.

இந்தியர்கள் மத்தியில் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த முயலும் இராமசாமி,உண்மையிலேயே ஜீரோதான் எனவும் நினைவுறுத்திய பேரா மாநில ஆட்சிகுழு உறுப்பினருமான சிவநேசன் பாக்காத்தான் ஹராப்பானில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கு எதிர்காலம் இருப்பதால்தான் அவர்கள் இந்நாட்டு அரசியலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளனர் என்றார்.

ஜசெக மற்றும் கெஅடிலான் ஆகிய கட்சிகள் மீதும் அவர்களுக்கு பெரும் நம்பிக்கை உண்டு.அதனால்தான் அவ்விரு கட்சிகளிலும் சீனர்களும் இந்தியர்களும் அதிகமாய் உறுப்பியம் சேர்வதோடு மட்டுமில்லாமல் அவற்றின் வெற்றிகளுக்காகவும் பெரும் ஆதரவாக இருந்து வருகின்றனர்.நாட்டின் இன்றைய அரசியல் மாற்றத்திற்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக தலைமையேற்று அரசாங்கத்தை வழிநடத்துவதற்கும் இந்தியர் மற்றும் சீனர்களின் ஆதரவு எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதை நாடே அறியும் போது பாக்காத்தான் ஹராப்பானில் எதிர்காலம் உள்ளதா என்பது உண்மைக்கு புறம்பான கருத்தியலை வெளியிடுவதற்கு ஈடானது என்றும் விவரித்தார்.

பாக்காத்தான் ஹராப்பானில் இந்தியர் – சீனர்களுக்கு எதிர்காலம் இல்லை என்பது போல் பதிவு செய்யப்பட்ட இராமசாமியின் பதிவை எடுத்து ஒரு தமிழ் நாளிதழ் பிரசுரம் செய்திருப்பது உண்மையில் நகைப்பிற்குரியது.நாட்டில் இருக்கும் முக்கியப் பிரச்னைகளை எழுதாமல்,மக்களை குழப்பும் இராமசாமி போன்றவர்களின் கிறுக்கல்களை முக்கியச் செய்தியாய் போடுவது பத்திரிக்கை தருமத்திற்கு எதிரானது எனலாம்.
பேரா மாநில ஆட்சிகுழு உறுப்பினராக இம்மாநிலத்தில் எத்தனையோ மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் நிலையில் 40-50ஆண்டுகால நிலப்பிரச்னை,பள்ளிக்கூடம்,ஆலயம்,பொருளாதாரம் என எத்தனை – எத்தனையோ சிக்கல்களுக்கு தீர்வை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவை எதுவும் முதன்மை செய்தியாக வராத நிலையில் மக்களை குழப்பும்,மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காத இராமசாமியின் புலம்பலை முதன்மை செய்தியாய் வெளியிடுவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் சிவநேசன் தெரிவித்தார்.

மேலும்,இராமசாமி கடந்த 2005இல் ஜசெகவில் இணைந்த போது அப்போது மத்திய செயலவையில் இருந்த தாம் இராஜினாமா செய்துவிட்டு,அவ்விடத்தை இராமசாமிக்கு விட்டுக் கொடுத்ததாகவும் கூறிய சிவநேசன் சுமார் 42 ஆண்டுகளாய் கட்சியில் உறுப்பினராக இருக்கிறேன்.ஆனால்,இராமசாமி கட்சியில் இணைந்து 18ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தது.
ஆனால்,இன்றைக்கு இராமசாமியின் பெயருக்கு முன்னாள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர்,துணை முதல்வர் என எழுதப்படுவதெல்லாம் ஜசெக என்னும் கட்சி இராமசாமிக்கு போட்ட பிச்சை என்பதை இராமசாமி மறந்துவிடக்கூடாது.

இராமசாமி உண்மையாகவே மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தால் இனி தன் பெயருக்கு முன்னாள் அப்பதவிகளை பட்டியலிடக்கூடாது.பத்திரிக்கைகளில் இனி முன்னாள் துணை முதல்வர் என எழுத வேண்டாம் என அவரால் வெளிப்படையாக அறிக்கை விடமுடியுமா என்றும் சவால்விடுத்தார்.
ஜசெகவை பொருத்தமட்டில் இந்தியர்களிடமும் சீனர்களிடமும் பெரும் செல்வாக்கு மிகுந்த கட்சியாகவே திகழ்கிறது.கடந்த பினாங்கு மாநில தேர்தலிலும் அது தெள்ளத்தெளிவாக வெளிப்பட்டதை இராமசாமியின் ஆதரவாளர்கள் போட்டியிட்டு வைப்புத் தொகை இழந்த விடயத்திலேயே அது புலப்பட்டு விட்டது என்றார்.இராமசாமி களம் இறங்கி பிரச்சாரம் செய்தும் அவரது தொகுதியில் போட்டியிட்ட அவரது ஆதரவாளர் வைப்புத் தொகை இழந்ததிலிருந்தே இராமசாமி மக்கள் ஆதரவு பெற்றவர் அல்ல.அவர் ஒரு ஜீரோ என்றும் நினைவுறுத்தினார்.

பாக்காத்தான் ஹராப்பானில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிர்காலம் உண்டா என கேள்வி எழுப்புவதை நிறுத்திவிட்டு பெர்சத்துவின் தலைவர்களில் ஒருவரான ஹம்சாவை சந்தித்தற்கான காரணத்தை இராமசாமி வெளிப்படையாக அறிவிப்பாரா என சிவநேசன் கோரிக்கை விடுத்தார்.
மேலும்,அச்சந்திப்பின் பின்னணி என்னவென வினவிய அவர் பெரிக்காத்தானில் தான் இந்தியர்களுக்கு எதிர்காலம் இருக்குனு இராமசாமி சொல்ல வருகிறாரோ எனவும் வினா தொடுத்த சிவநேசன் பெரிக்காத்தானில் தலைமை ஏற்றிருப்பது பாஸ் கட்சி.பாஸ் கட்சியை ஆதரித்தால்,ஜாக்கிர் நாய்க்கை ஆதரிப்பதற்கு ஈடானது என்றும் எச்சரித்தார்.
அரசியலில் தன் அடையாளத்தை இழந்ததோடு மட்டுமின்றி மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு விட்ட இராமசாமி நடப்பு சூழலில் மௌனமாய் இருப்பதுதான் அவருக்கு நல்லது.அவர் இனியும் தன்னை ஹீரோவாய் காட்ட முயல்வதை நிறுத்திவிட்டு இந்திய சமுதாயத்தின் குரல் என்னும் இராமசாமியின் போலி முகத்திரை எப்பவோ கிழிக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்து ஒதுங்கியிருப்பது சிறந்தது எனவும் அறிவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles