
புத்ரா ஜெயா, டிச 6-
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான கல்வி எதிர் காலத்தையும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய மனிதவள அமைச்சர் வ சிவகுமார் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுப்போம் என்று தமிழ்ப் பள்ளிகளின் நலன் காக்கும் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெற்றிவேலன் தெரிவித்தார்.
எஸ்.கே.எம் என்றழைக்கப்படும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இட மாற்றம் மூலம் காப்பாற்றுவதற்காக தேசிய பட்ஜெட்டில் 50 மில்லியன் ரிங்கிட் ஆண்டு ஒதுக்கீட்டை அரசு ஒதுக்க வேண்டும்.
ஒரு வருடத்திற்கு 5 தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றினால், 25 பள்ளிகளை 5 ஆண்டுகளுக்குள் காப்பாற்ற முடியும் என்றார்.
இதன் மூலம் மடானி அரசாங்கத்தின் மீது இந்திய மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
தமிழ்ப் பள்ளிகள் உண்மையில் பி40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 70,000 மாணவர்கள் (67%) அவர்களுக்குத் தெரிந்த தமிழ் மொழி மூலம் அடிப்படைக் கல்வியைப் பெற உதவுகின்றன.
மாணவர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் 26 தமிழ் பள்ளிகள் உள்ளன.
அவை மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
இந்திய சமூகம் சிறந்த பொருளாதாரத்தை நாடி நகரங்களுக்குச் செல்வதால், தமிழ்ப் பள்ளிகள் இயற்கையாகவே மாணவர் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
எனவே, இந்தச் சிக்கலை அரசு உணர்ந்து, பள்ளிகளை கட்டம் கட்டமாக இடமாற்றம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக, 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 26 பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய மனிதவள அமைச்சர் சிவகுமார் முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
அவருக்கு நாங்கள் பக்கப் பலமாக இருந்து உதவி புரிவோம் என்று அவர் சொன்னார்.

