மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அனைத்து தமிழ்ப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள்!

புத்ரா ஜெயா, டிச 6-
மழலையர் பள்ளி வகுப்புகள் இல்லாததால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

மழலையர் பள்ளி என்பது தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஊட்டமாகும்.

தமிழ்மொழி பாடம் போதிக்காத தனியார் மழலையர் பள்ளிகளுக்குப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பும் பட்சத்தில், குழந்தை 7 வயதை அடையும் போது தானாகவே தமிழ் பள்ளியில் சேர்க்கப்படுவதில்லை.

மேலும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சேரும் தனியார் மழலையர் பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்களுக்குச் சுமையாக இருப்பார்கள்.

ஏனெனில் கற்பிக்கப்படுவதைப் புரிந்துகொள்ள தமிழ் என்ற உறுதியான அடித்தளம் இல்லை.

எனவே, தமிழ்ப்பள்ளிகள் தோறும் மழலையர் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

அனைத்து தமிழ்ப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் இருந்தால் மாணவர்கள் எண்ணிக்கை தானாகவே உயரும் என்று தமிழ்ப் பள்ளிகளின் நலன் காக்கும் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெற்றிவேலன் தலைமையிலான தமிழ் ஆர்வலர்கள் நேற்று மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய அமைச்சர் என்ற முறையில் தமிழ்ப் பள்ளிகள் விவகாரங்கள் குறித்து அமைச்சரவையிலும் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கிடம் பேசும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்க நீண்ட காலமாக நானும் போராடி இருக்கிறேன்.

அந்த வகையில் தமிழ் பள்ளிகள் பிரச்சனை குறித்து கண்டிப்பாக அமைச்சரவையில் பேசுவேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles