இழக்கப்போகும் பட்டியல் நீள்வதற்குள், விழித்துக்கொள்வோம்!!!

 

மலாயாவிற்கு புலம் பெயர்ந்தவர்களில் ஏறத்தாழ 85% தமிழர்களே. அதனால், தான் மலாயாவில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், சீக்கியர்கள் என அனைத்து இந்தியர்களுக்கும் பொது மொழியாகத் தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழ்ப்பள்ளிகளும் தமிழர் திருநாளும் இந்தியர்களுக்கான அடையாளங்களாக இங்கு வளர்ந்து நிற்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது மக்களிடையே சுதந்திர தாகம் பெருகி மலாயாவில் சுய ஆட்சி அமைக்க முடியும் என்பதனை நிரூபிக்க 1955-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

அன்று போட்டியிட்ட 52 இடங்களில் 51 இடங்களில் மகத்தான வெற்றியினை பதிவு செய்து அன்றைய அம்னோ, ம.இ.கா மற்றும் ம.சி.ச கூட்டணி மலாயாவின் முதல் அமைச்சரவையை அமைத்தது.

அன்று தொடங்கி இன்று வரை 68 ஆண்டுகளாக மலேசியாவின் அனைத்து அமைச்சரவையிலும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இடம்பெற்று வந்துள்ளனர்.

மேலும், தொழிலாளர்கள் துறை, பொதுப்பணித்துறை மற்றும்
மனிதவளத் துறை என முக்கிய அமைச்சு பொறுப்புகளை மலேசிய இந்தியப் பிரதிநிதிகள் ஏற்று திறன்படச் செயலாற்றியும் உள்ளனர் என்பது வரலாறு.

தற்போது அரசமைத்துள்ள பக்காதான் ஹரப்பான் 2008-ஆம் ஆண்டிலிருந்தே மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து நமது பெரும்பான்மை ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பூர்வ குடிகளானாலும், எந்த இனமானாலும் அனைவரும் என் மக்களே என்ற
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அவர்களின் கூற்றும் மலேசிய இந்தியர்களின் நம்பிக்கையும்
பெருமதிப்பையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. அதனாலேயே கடந்த பொது தேர்தலில்
பக்காத்தான் ஹரப்பானின் வெற்றிக்கு பல இந்தியர்கள் கடுமையாக உழைத்திருக்கின்றனர் என்பதே நிதர்சணமான உண்மை.

அதன் பயனாகவே கடந்து பொதுதோர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்த போது மாண்புமிகு சிவகுமார் அவர்கள் மனிதவள துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையிலோ
தமிழ் பேசும் பிரதிநிதிகள் இடம் பெறவில்லை.

மாண்புமிகு கோவிந்த் சிங் அவர்கள் இலக்கவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதில் மலேசிய இந்தியராக நமக்குப் பெருமிதமே என்றாலும்,
இந்த புதிய அமைச்சரவையில் தமிழ் பேசும் இந்தியப் பிரதிநிதி இல்லாதது பெரும் வருத்தத்தையே அளிக்கிறது என்று டிரா மலேசியாவின் தலைவர் சரவணன் சின்னப்பன் கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கையை அடுத்து மலேசியாவில்தான் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரதமரின் இந்த அமைச்சரவை மாற்றம் அனைவருக்கும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

தோட்டப்புறத்தில் சஞ்சிக் கூலிகளாக பசி பட்டினியில் வாடிய காலத்தில் கூட மொழி, பண்பாடு, கலை, சமூகம் என எதையுமே விட்டுக் கொடுக்காமல் இதுவரை கண் போல் காத்து வந்துள்ளோம்.

இதனாலேயே முதல் உலக தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவிலேயே நடத்தப்பட்டதும், இவ்வருடம் 11-வது உலக தமிழாராய்ச்சி மாநாடு இங்கு நடத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து பல உலக தமிழர் சார் நிகழ்வுகள் மலேசியாவில் நடத்தப்பட்டு வருகின்றன. இனி இதுபோல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மலேசிய இந்திய அமைச்சர் தமிழில்
பேசுபவர் இல்லை என்றால் அது நம் சிறப்பை குலைப்பதாக இருக்காதா என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் சரவணன்.

இது மலேசிய இந்தியர்களுக்கு மட்டுமல்ல; பல்லின மக்களின் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் போற்றி பாதுகாக்கும் நாடு எனும் நமது மலேசியத் திருநாட்டின் பெருமையும் பாதிக்கும் என்றார் அவர்.

இது நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம். இன்று மலேசிய அமைச்சரவையில் தமிழ் பேசும் பிரதிநிதியையும் முக்கிய அமைச்சுகளின் பொறுப்பையும் நாம் இழந்திருக்கிறோம்.

இதன் பிறகும் அமைதிகாத்தோமால் இனி இந்நிலை இப்படியே தொடர்ந்து விடும் என்பதை மலேசிய இந்தியர்களும், இந்தியச் சமூகத் தலைவர்களும் உணர்ந்து உடனடியாக குரலெழுப்ப வேண்டும் என டிரா சரவணன் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles