
மலேசியாவில் பிறந்து தமிழுக்கும், சமயத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்க்கும் தன்னலமின்றி சேவையாற்றி வரும் டத்தோ ஶ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் தமிழகத்தில் பெருந்தமிழன் இராசராசன் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மாமல்லபுரம் கிங்ஸ் மெடிக்கல் அகாடெமியில் நடைபெற்ற மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 14வது முப்பெரும் விழாவில் இவருக்கு இந்த பெருமைக்குரிய உயரிய விருதினை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மலேசியாவின் அரசியல் தளத்தில் தனக்கென்ற ஓர் ஆளுமையை கொண்டிருப்பவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சரவணன் ஆவார். இவரின் அரசியல் வரலாற்றில் தாப்பா நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு 5 முறைகள் தொடர் வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். மேலும் கூட்டரசு பிரதேச துணை அமைச்சராகவும், இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சராகவும், மனிதவள அமைச்சராகவும் பொதுமக்களுக்கு தனது அரசியல் பணியாற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இருந்தாலும் தமிழுக்கும் சமயத்திற்கும் தனது அளப்பரிய தொண்டுகளை செய்து வரும் இவருக்கு உலக தமிழர்களின் வாழ்த்துகளையும் டத்தோஶ்ரீ சரவணன் பெற்று வருகிறார். இவரின் இத்தகைய தொண்டுகளையும் இவரின் இலக்கிய அறிவையும் பாராட்டும் வகையில் இந்த பெருந்தமிழன் இராசராசன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா.) தேசிய துணைத்தலைவாரான டத்தோ சரவணன் அவருக்கு தமிழ்நாடு அரசின் ஊரகத் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் போற்றுதலுக்குறிய பெருந்தமிழன் இராசராசன் விருதினை எடுத்து வழங்கியுள்ளார்.
உலகளவில் போற்றக்கூடிய இந்த பெருந்தமிழன் இராசராசன் விருதை டத்தோஶ்ரீ சரவணன் பெற்றிருப்பது மலேசிய தமிழர்களாக பெருமைகுரிய ஒன்றாகும்.

