
சிம்மோர், ஜன. 11:
இங்குள்ள கந்தான் ஸ்ரீ கல்லுமலை காளியம்மன் ஆலய தலைவராக தியாகராஜன் கெங்கன் அணியினர் தேர்வு செய்யப்பட்டனர். அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை பேராக் மாநில திவால் இலாகா வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கப்பெற்றதாக ஆலயத்தின் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்ட கெ. தியாகராஜன் கூறினார்.
இந்த ஆலயம் 80 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவது வரலாற்று பதிவில் உள்ளது. இருப்பினும், கடந்த 10 வருடங்களாக மற்றொரு தரப்பினர் இந்த ஆலயத்தை நிர்வகித்து வந்துள்ளனர். அதன் பின், இம்மாதம் 9 ல் பேராக் திவால் இலாகாவினர் இவ்வாலய நிர்வாக குழுவை தேர்வு செய்யும் பொருட்டு ஆண்டுக்கூட்டத்தையும், ஆலய தேர்தலையும் வழிநடத்தினர் என்று அவர் குறிப்பிட்டார்.
நடத்தப்பட்ட இந்த தேர்தலில் கெ.தியாகராஜன் அணியினர் வெற்றிபெற்றனர். அதன் அடிப்படையில் 10 ஜனவரியில் வெளியிட்ட கடிதத்தில் கெ. தியாகராஜன் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக பேராக் மாநில திவால் இலாகாவின் இயக்குநர் வெளியிட்ட கடிதத்தை அவர் காண்பித்தார்.
இந்த புதிய நிர்வாகம் முறைப்படி நேர்த்தியாக வரவு செலவு கணக்கிணை ஒவ்வொரு மாதமும் திவால் இலாகாவிற்கு வழங்கப்பட வேண்டும். அதோடு, சமய சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை முறைப்படி நடத்த வேண்டும். ஆலய நிர்வாகத்திற்கு கிடைக்கும் நிதியுதவிகள் மற்றும் இதர உதவிகள் அனைத்தும் பதிவு செய்து இலாகாவின் பார்வைக்கு கொண்டுவரும்படி அக்கடிதம் குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இனி புதிய நிர்வாகத்தை நியமனம் செய்து முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறந்த நிர்வாகமாக செயல்பட்டு பொதுமக்கள் மற்றும் திவால் இலாகாவின் பார்வைக்கு சிறந்து விளங்க அனைத்து சேவைகளையும் செய்வோம் என்று அவர் உறுதியளித்தார்.

