
சென்னை,ஜன15:
தொழில்திறன் கல்வியில் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கவும் அத்துறையில் அவர்கள் ஆர்வமாய் கலந்து சிறந்த இலக்கை எட்டவும் சட்டம் மற்றும் நிறுவன சீர்த்திருத்தம் துணை அமைச்சர் மாண்புமிகு மு.குலசேகரன் நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்து ஆகியோரை சந்தித்து பேசினார்.
நாளைய உலகை ஆட்கொள்ளப் போகும் தொழில்திறன் கல்வியில் நம் மாணவர்களும் இளைஞர்களும் தங்களை வலுமிக்கவர்களாய் உருமாற்றிக் கொள்ள இச்சந்திப்பு மிக அவசியமானதாக அமைந்ததாக கூறும் துணை அமைச்சர் கமல்ஹாசன் மற்றும் ரஜினியிடம் தொழில்திறன் கல்வி சார்ந்து கலந்தாலோசித்ததோடு மட்டுமின்றி மலேசிய இளைஞர்களை அத்துறை சார்ந்து பயணிக்க வைக்கவும் அவர்களின் பங்களிப்பு குறித்தும் பேசப்பட்டதாக குறிப்பிட்டார்.
நடிகர் கமல்ஹாசன் சினிமா துறை சார்ந்தும் விவசாயம் சார்ந்தும் அத்துறைகளில் இளைஞர்களின் கவனம் எதிர்காலம் குறித்தும் பேசிய வேளையில் சினிமா துறையில் அதிகமான தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களில் இளைஞர்கள் முனைப்பு காட்ட வேண்டும் எனவும் ஆலோசனை கூறினார்.
அதேவளையில்,விவசாயத்துறையிலும் நம் இளைஞர்களின் கவனம் தீவிரமாக வேண்டும்.தொழில்நுட்பத்தோடும் அறிவியல் சார்ந்தும் விவசாயத்துறையில் மேம்பாடு காணவும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் எனவும் குலசேகரனுடன் பேசும் போது கமல்ஹாசன் தெரிவித்தார்.
முன்னதாக ரஜினியிடம் சினிமா துறை சார்ந்தும் கலந்தாலோசித்த பின்னர் அவரது துணைவியார் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் தொழில்திறன் கல்வி நிலையம் குறித்தும் துணை அமைச்சர் கேட்டறிந்தார்.
லதா ரஜினிகாந்த் அவர்கள் தொழில்திறன் கல்வியில் பல மாணவர்களை உருவாக்கியிருக்கும் சூழலில் அவரது ஒத்துழைப்பும் அனுபவமும் மலேசிய சூழலுக்கு நம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் எத்தகைய பங்களிப்பை ஏற்படுத்த முடியும் என்பதையும் குலசேகரன் நன்முறையில் எடுத்துரைத்தார்.
இளைஞர்களை தொழில்திறன் கல்வியில் மேம்படுத்தவும் அவர்கள் அத்துறையில் மிளிர வைக்கவும் துணை அமைச்சர் குலசேகரன் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வ செயல்பாடு மற்றும் பணிகளை உணர்ந்த அவர்கள் மலேசியாவில் மேற்கொள்ளப்படும் இத்துறை சார்ந்த செயல்பாடுகளுக்கு பங்களிப்பு செய்யவும் கலந்து இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும் இணக்கம் தெரிவித்தனர்.
மலேசியாவில் மாணவர்களையும் இளைஞர்களையும் இத்துறை சார்ந்து வெற்றிகரமாக இலக்கை நோக்கி பயணிக்க வைக்க தொடர்ந்து துணை அமைச்சர் குலசேகரன் தனித்துவ செயல்பாட்டை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் ஆர்வமுன் ஈர்ப்பும் எப்பவுமே சினிமா நோக்கி இருப்பதால் ரஜினி,கமல் போன்றவர்களோடு கைகோர்த்து நம் மாணவர்களையும் இளைஞர்கள் மத்தியிலும் தொழில்திறன் கல்வியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாகவும் குலசேகரன் தெரிவித்தார்.
நாட்டில் நடப்பில் தொழில்திறன் க்ல்விக்கு அரசாங்கம் நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதில் நம் இளைஞர்களும் மாணவர்களும் விடுபடாமல் வெற்றிகரமாக அத்துறையில் ஆளுமை செலுத்தி நன்சமூகமாய் இலக்கை எட்ட இதுபோன்ற எல்லா முயற்சிகளும் துணை அமைச்சராக தாம் தொடர்ந்து முன்னெடுப்பேன் என்றும் செய்தியாளர் சந்திப்பில் அவர் விவரித்தார்.
மேலும்,மலேசியாவில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறும் துணை அமைச்சர் உலகெங்கும் ஆளுமை கொண்டிருக்கும் தொழில்புரட்சி 4.0இல் நம் மாணவர்களும் இளைஞர்களும் விடுபடாபல் இருக்க தொழில்திறன் கல்வியில் தனித்துவ ஆளுமை கொண்டு செழிமையுற வேண்டும் எனவும் குலசேகரன் கூறினார்.
மேலும்,தொழில்திறன் கல்வியில் ஆர்வமுள்ள இளைஞர்களும் மாணவர்களும் ஆலோசனைக்கு தன்னை அணுகலாம் என்றும் நாடு முழுவதும் இதுகுறித்த விளக்கம் பெறவும் தன்னை தொடர்புக் கொள்ளுமாறும் குலசேகரன் கேட்டும் கொண்டார்.

