
ஷா ஆலம், மார்ச் 8-
மேம்பாட்டுப் பணிகள் காரணமாக தங்கள்
குடியிருப்புகளை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நான்கு இந்திய
குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை பெறுவதற்கான வாய்ப்பு நேற்று
வழங்கப்பட்டது.
புக்கிட் கெமுனிங் 8ஆவது மைல், ஜாலான் பத்து பாத்தாவில்
வடிகால் மற்றும் நீர்பாசனத் துறைக்கு (ஜே.பி.எஸ்.) சொந்தமான நிலத்தில்
சுமார் 45 ஆண்டுகளாக வசித்து வரும் அக்கும்பங்களைச் சேர்ந்தவர்கள்
வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் அங்கிருந்து
வெளியேற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இவ்விவகாரம் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித் தரும்
முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
இதன் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சிலாங்கூர் மாநில
வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் (எல்.பி.எச்.எஸ்.) எல்.பி.எஸ்.
மாவட்ட நில அலுவலகம், வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்று
சந்திப்பு நடத்தப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் தொகுதி அலுவலகத்தில்
நடைபெற்ற இந்த சந்திப்புக் கூட்டத்தில் ஷா ஆலம் மாநகர் மன்ற
உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி சாமிநாதன் கோத்தா கெமுனிங்
தொகுதி இந்திய சமூகத் தலைவர் மா.நடராஜன் ஆகியோரும் கலந்து
கொண்டனர்.
பண்டார் புத்ரா 2இல் 220,000 வெள்ளி மதிப்பிலான சிலாங்கூர் கூ
வீடுகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விற்பனை செய்யவும் அந்த வீடுகள் தயாராகும் வரையில் கோத்தா கெமுனிங்கில் உள்ள சிலாங்கூர் கூ வீடுகளில் ஸ்மார்ட் சேவா எனப்படும் வாடகை அடிப்படையில் தற்காலிகமாகத் தங்கியிருக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கவுன்சிலர் யோகேஸ்வரி தெரிவித்தார்.

