சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக கூட்டணியில் சனிக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.
இதன் மூலம், தமிழகத்தில் இம்முறை திமுக 21 தொகுதிகளில் களம் காண்பது கவனிக்கத்தக்கது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , மதிமுக, விசிக, கொமதேக, ஐயுஎம்எல், மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடன் தொகுதிகளை பங்கிட்டு வருகிறது.
இதில் கொமதேகவுக்கு நாமக்கல், ஐயுஎம்எல்-க்கு ராமநாதபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்பின், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி, விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.