2025ம் ஆண்டு ஜூனில் 2வது தமிழ் செம்மொழி மாநாடு:   முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

2-வது செம்மொழி மாநாடு 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி; தொன்மை பண்பாடு தனித்தன்மை பொதுமைப் பண்பு உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் கருணாநிதி. 

உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12-ம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.

இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும். இவ்வாறு முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles