
சுங்கை,மார்ச்30:
நமது பாரம்பரிய முறையிலான குழந்தைகள் பராமரிப்பு,அவர்களின் ஆரோக்கியம் நலன் சார்ந்து மட்டுமின்றி அக்குழந்தைகளை பாரம்பரிய முறையில் குளியல் முறையை மேற்கொள்வது தொடர்பிலான பயிலரங்கம் பேரா மாநில தொழிற்திறன் மேம்பாட்டிற்கு தலைமையேற்றிருக்கும் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அ.சிவநேசன் தலைமையில் சுங்கையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
“Pusat Aspirasi Anak Perak (PASAK)” எனப்படும் பேரா மாநில தொழிற்திறன் நடவடிக்கையின் கீழ் இப்பயிலரங்கத்தை சிவநேசன் தலைமையில் இயங்கி வரும் சுங்கை தொழிற்திறன் பயிற்சி மையத்தில் ஐந்து நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாரம் சனி,ஞாயிறுகளிலும் வரும் வாரத்தில் வெள்ளி,சனி,மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் இப்பயிலரங்கம் நடைபெறும்.
தொழிற்திறன் கல்வி அடிப்படையில் நமது பாரம்பரிய செயல்முறை,நடவடிக்கைகளையும் இன்றைய இளம் தலைமுறையோடு இல்லத்தரசிகளுக்கும் பயனாக திகழ்ந்திடும் இப்பயிலரங்கத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தகாலங்களில் நம் வீடுகளில் தாத்தா பாட்டி குழந்தைகளையும் பேரப்பிள்ளைகளையும் மிகச் சிறப்பாக பராமரித்து வந்தனர்.
குழந்தையை குளிக்க வைத்தலில் கூட அத்தகைய நுட்பத்தையும் ஆரோக்கியத்தையும் கடைபிடித்தனர்.குழந்தைகளை வளர்ப்பதும்,பராமரிப்பதும் ஒரு கலையாக செய்தனர்.
ஆனால்,கால ஓட்டத்தில் எல்லாமே மறைந்து போனது எனலாம்.மறைந்து போன அல்லது கவனம் செலுத்தாமல் போன நமது பாரம்பரிய குழந்தை பராமரிப்பு,குளிக்க செய்தல்,ஆரோக்கியம் சார்ந்த விடயங்களை மீட்டெடுக்கும் ஒரு பயிலரங்கமாகவே இதனை சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று தொடங்கிய இப்பயிலரங்கம் முதற்கட்டமாக குழந்தைகள் பராமரிப்பு,மற்றும் ஆரோக்கிய நலன் சார்ந்த செயல்பாட்டை எவ்வாறு வியபார ரீதியில் அனுகுவது,விரிவாக்கம் செய்வது,அதனை தொழில் சார்ந்து முன்னெடுப்பது போன்ற வர்த்தகம் சார்ந்த யுக்திகளையும் அதற்கான தேடல்களோடு வழிமுறைகளையும் இப்பயிலரங்கத்திற்கு தலைமையேற்ற திரு.ஆல்பெர்ட் சைமன் விவரித்தார்.
தஞ்சோங் மாலிம் தொடங்கி தாப்பா,ஈப்போ வரையிலான சுமார் 20 மகளிர் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் தொழில் ரீதியான முன்னெடுப்புடன் சுயத்தொழில் அதுவும் நமது பாரம்பரியம் பண்பாடு சார்ந்த தொழிலில் தனித்துவ திறனுடன் வருமானம் ஈட்டுவதற்கான அடித்தளத்தையும் இப்பயிலரங்கம் வாயிலாக நிச்சயம் பெற முடியும் என்பது தின்னம்.
சுங்கையில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அ,சிவநேசன் தலைமையில் தொடர்ந்து பல்வேறு தொழில்திறன் பயிலரங்கம் முன்னெடுக்கப்பட்டு வருவது.
இந்திய இளைஞர்கள்,பெண்கள்,கல்வியில் பின் தங்கியவர்கள் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் பயன்பெறும் வகையில் பல்வேறு தொழில் திறன் பயிலரங்கம் சமுதாய வளர்ச்சியையும் மேம்பாட்டையும் முன்னிறுத்தி அவர் ஏற்பாடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துவ கவனம் செலுத்தி வருவதாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி நம் சமுதாயத்தினர் தங்களின் வளமான நம்பிக்கை மிகுந்த வாழ்வியலை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சுங்கையை பொருத்தமட்டில் தொடர்ந்து நடைபெறும் இதுமாதிரியான பயிலரங்கங்களில் நம்மவர்கள் கலந்து பயன்பெற வேண்டும் எனவும் அதுகுறித்த விளக்கம் அல்லது வழிகாட்டலை சுங்கை சட்டமன்ற சேவை மையத்தில் கேட்டறிந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

