
(காளிதாஸ் சுப்ரமணியம்)
(மா.பவளச்செல்வன்)
செரண்டா, கம்போங் முகமட் தைப் ஸ்ரீ தெராத்தாயில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அருகில் சட்டவிரோதமாக கடையை நிர்மாணித்த வங்காளதேசிக்கு 100 ரிங்கிட் அபராதம் வித்தித்து கோல குபு பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை கோல குபு பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அக்கடை ஆலயத்திற்கு இடையூறாக உள்ளது என போராடிய ஆலயத்தின் செயலாளர் பாஸ்கரன் இருசன் சம்பந்தப்பட்ட வங்காளதேசியை மிரட்டியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.
மஜிஸ்திரேட் முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னர், தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து பாஸ்கரன் விசாரணை கோரினார்.
பின்னர், பாஸ்கரனுக்கு 2,500 ரிங்கிட் தொகையுடன் ஜாமீன் வழங்குவதாக மஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
கடந்த மாதம், இவ்விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சையில் சம்பந்தப்பட்ட வங்காளதேசியையும் பாஸ்கரனையும் போலீசார் கைது செய்து விசாரணைக்காக தடுத்து வைத்தனர்.
அந்நிய நாட்டினர் ஒருவர் மலேசிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு உள்ளூர்வாசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி வரும் தகவல் அறிந்து உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் ப.புவனேஸ்வரன் ஆலய நிர்வாகத்திற்கு ஆதரவாக களமிறங்கினார்.
இந்த விவகாரத்தை சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கவனத்திற்கு அவர் கொண்டுச் சென்றார்.
பின்னர், அந்த சட்டவிரோத கடை நீதிமன்ற அனுமதியுடன் உடைக்கப்படும் என பாப்பாராய்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

