
கோலகுபுபாரு இடைத்தேர்தல் சூடு பிடித்திருக்கும் வேளையில் கள நிலவரத்தை கண்டறிய கோலகுபுபாரு சட்டமன்றத்திற்கு உட்பட்ட பல இடங்களுக்கு வருகை தந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு, வெற்றுப் பேச்சு வேலைக்கு ஆகாது.
கோலகுபுபாரு வட்டார மக்களின் நலனில் அக்கறை செலுத்தி கடந்த மூன்று தவணைகளாக இங்கு சட்டமன்ற உறுப்பினராக லீ கீ ஹியோங் வெற்றிக் கண்டுள்ளார். அவர் இன்று நம்மோடு இல்லாததைக் கண்டு மிக குறைந்த அளவிலான அதிருப்தியாளர்களை கொண்டு இந்த இடைத்தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை திசைத் திருப்பலாம் என நினைக்க வேண்டாம் என நம்பிக்கை கூட்டணியில் நன்மைப் பெற்று பிரிந்த இந்திய தலைவர்களை சாடினார் பாப்பாராயுடு.
சிலாங்கூர் மாநிலத்தின் உதவிகளும் சொந்த சட்டமன்றத்தின் உதவிகளும் இங்குள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசு சார்ந்த இடைத் தேர்தல், இதில் மத்திய அரசு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி உலுசிலாங்கூர் மக்களுக்கே மிகப் பெரிய அநீதியை இழைக்க ஒரு தரப்பு முயற்சி செய்கிறது.
இங்குள்ள நாடாளுமன்றம் உட்பட இரண்டு சட்டமன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் எந்தளவிற்கு இந்திய சமுதாயத்தை அணுகுகிறார்கள் என்பது கண்கூடு. கடந்தக் காலங்களில் மக்களிடையே உணர்வுப்பூர்வமாக பேசியவர்கள் தேர்தலுக்கு பிறகு மக்களுக்கான உதவிகள் பெற்றுத் தருவதிலும் தலைமறைவாகி இருப்பதையும் மக்கள் மறக்க மாட்டார்கள் என்று அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
இந்த இடைத் தேர்தலில் முழு மூச்சாக களத்தில் இருந்து இந்தியர்களுக்கு மாநில அரசு நடவடிக்கைகள் விவரிப்பதுடன் அவர்களின் வாக்குகள் இங்குள்ள சட்டமன்றத்தின் வெற்றிக்கு ஆதரவு திரட்ட முனைப்பு காட்டப்படும் என்ற அவர், தலைமத்தும் தேர்வு செய்யும் புதிய வேட்பாளர் இங்குள்ள மக்களின் நலனில் எந்தவொரு இன பாகுப்பாடு இல்லாமல் செயல்படுவார் என்று பாப்பாராயுடு நம்பிக்கை தெரிவித்தார்.