
(காளிதாஸ் சுப்ரமணியம்)
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 9-
மலேசிய தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் தமிழ்க் கல்வி தேசிய மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
மலாயா பல்கலைக்கழகத்தில் கொம்ப்ளைக்ஸ் பெர்டானா சில்வா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 800 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் இளஞ்செழியன் வேணுகோபால் தெரிவித்தார்.
தேவையும் தீர்வும் என்ற கருப்பொருளில் நடக்கும் இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் விழுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்றார் அவர்.
மலேசிய தமிழ் அறவாரியம் கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அயராது உழைத்திருக்கிறது.
அந்த வகையில் தமிழ்க் கல்வி குறித்த இந்த மாநாடு தமிழ் கல்வியில் ஏற்படும் முக்கிய சவால்களையும் வாய்ப்புகளையும் கண்டறியும் என்றார் அவர்.
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறையை ஆராய்தல், இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்களிடையே தமிழ் இலக்கிய பாடத்தை ஊக்குவித்தல் ஆகியவை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றார்.
மலேசிய தலைமையாசிரியர் மன்றம், மலேசிய தமிழ்ப் பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம்,
மலேசிய தமிழ்மொழி காப்பாகம் மற்றும் இடைநிலைப் பள்ளி தமிழ் மொழி ஆசிரியர் சங்கம் இந்த மாநாட்டிற்கு முதன்மை ஏற்பாட்டாளர்களாக விளங்குகிறது.
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், படிவம் 6 தமிழ்மொழி ஆசிரியர்கள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள் என்றார்.

