சிலம்பக் கலைக்குஆதரவு தொடரும்!அமைச்சர் ஹன்னா இயோ

காளிதாஸ் சுப்ரமணியம்

ராசா, மே 6-
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்திற்கு ஆதரவு தொடரும் என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் ஆதரவோடு உலு சிலாங்கூர் மாவட்ட சிலம்பக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று கோலகுபு பாரு ராசா கம்போங் சுவாங் மண்டபத்தில் லீ கீ ஹியோங் சுழற்கிண்ண சிலம்ப போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

கோலகுபு பாரு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லீ கீ ஹியோங் சிலம்ப கலைக்கு பெரும் ஆதரவை வழங்கியிருக்கிறார்.

மூன்று தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அவர் சிலம்பப் போட்டிக்கு பெரும் ஆதரவை வழங்கியது மறக்க முடியாது.

அந்த வகையில் கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினராக பாக் சோக் தாவ் தேர்வு செய்யப்பட்டால் அவரும் சிலம்ப கலைக்கு உற்சாக ஆதரவை வழங்குவார் என்று போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை ஏற்று வழங்கிய போது ஹன்னா இயோ தெரிவித்தார்.

இதனிடையே மலேசிய சிலம்ப கழகத்தின் முன்னாள் தலைவர் ஏ. விஷ்வலிங்கம் தமது உரையில் 2024 ஆம் ஆண்டு சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் ஹன்னா இயோ என்று பாராட்டினார்.

ஒன்பது ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இப்போது சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ளது மலேசிய தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார் அவர்.

இந்த தருணத்தில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார் அவர்.

உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலரும் உலுசிலாங்கூர் சிலம்பக்கழகத்தின் தலைவருமான திலகேஸ்வரி முனியாண்டி கூறுகையில், மறைந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் இந்தியர்களுக்கு பயனளிக்கும் நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அத்தகைய நடவடிக்கைகளில் உலுசிலாங்கூர் சிலம்பக்கழகத்திற்கும் அவர் நன்மைகள் செய்துள்ளார்.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டிக்கு 2015 இல் சுழற்கிண்ணத்தை லீ கீ ஹியோங் வழங்கினார் என்று திலகேஸ்வரி கூறினார்.

உலுசிலாங்கூரு நாடாளுமன்ற ஒருங்க்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles