
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 10-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஒப்பிடுவது நியாயமல்ல என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியர்களுக்கு நிறையவே செய்தார்.
ஆனால் இப்போது பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமுதாயத்திற்கு எதிர் பார்த்த அளவுக்கு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இது பற்றி கருத்துரைத்த டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், நஜிப்புடன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
காரணம் டத்தோஸ்ரீ நஜிப் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்தார். அதனால் இந்திய சமுதாயத்திற்கு செய்ய முடிந்தது.
ஆனால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்று 18 மாதங்கள் மட்டுமே ஆகிறது.
இந்திய சமுதாயத்திற்கு அதிக அளவில் உதவி செய்ய அவருக்கு கால அவகாசம் தேவை.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்ய முடியாது.
முறையாக திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் இந்திய சமுதாயத்திற்கு உதவி வருகிறார்.
ஆகவே தனது பதவி காலத்தில் இந்திய சமுதாயத்தின் தேவைகளை அவர் முறையாக பூர்த்தி செய்வார் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

