சமூக சேவையாளர் சின்னராஜூ தலைமையில் சுங்கை சிப்புட் வட்டார தமிழ்ப்பள்ளிகளுக்கு பள்ளிச் சீருடை – புத்தகங்கள் அன்பளிப்பு!!

சுங்கை சிப்புட்,மே17: தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் கல்வி மேம்பாட்டிலும் தொடர்ந்து தனித்துவ பங்களிப்பை ஆற்றி வரும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தலைவர் சமூக சேவையாளர் வீ.சின்னராஜூ தலைமையில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இயங்கி வரும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் பள்ளிச் சீருடையோடு பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டது.

சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தோடு கைகோர்த்து ம இ கா ஶ்ரீ தாமான் கிளையும் இந்த அரும்பணியில் களமிறங்கிய வேளையில் ம இ காவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ ச.விக்னேஸ்வரன்,உயர்திரு ஹா காட் ஹன் மற்றும் மதிப்புமிகு தாஸ் – மகேஸ்வரி இணையர் ஆகியோரின் பேராதரவோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த அரும்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சின்னராஜூ தெரிவித்தார்.

மேலும்,சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள 8 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தத்துப் பள்ளியான கட்டித்தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் 80 பேருக்குப் பள்ளிச்சீருடடைகளும், சுமார் 8 000 பயிற்சி புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் தலா 1000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கப்பட்டது. பள்ளிக்கட்டணம் செலுத்தமுடியாமல் தவிக்கும் சில மாணவர்களுக்கு உதவி தொகையும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் தொடங்கப்பட்டு சுமார் 18 ஆண்டுக்காலத்தில் இயக்கம் தொடர்ந்து நனிச் சிறந்த சேவையை முன்னெடுத்து வருவதாகவும்,குறிப்பாக தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் இயக்கம் பெரும் அக்கறைக் கொண்டிருப்பதாக கூறும் சின்னராஜூ இயக்கத்தின் இத்தனை ஆண்டுக்கால சேவைக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் ஹா காட் ஹன் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

தனது 20 ஆண்டுக்கால நண்பரான ஹா காட் ஹன் இனம்,மொழி,மதம் கடந்து நாங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து பேராதரவு வழங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.அதேவேளையில்,மாணவர்களுக்காக தங்களின் பங்களிப்பை இன்றுவரை வழங்கி வரும் தலைநகரை சேர்ந்த தாஸ் – மகேஸ்வரி தம்பதியரின் பங்களிப்பையும் நினைவுக்கூர்ந்த அவர் அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினை பதிவு செய்து கொண்டார்.

மேலும்,ம இ கா ஶ்ரீ தாமான் கிளையின் தலைவருமான சின்னராஜூ இத்தொகுதியில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் செயல்பாட்டுக்கும் கட்சியின் தேசிய தலைவரின் ஆதரவும் தொடர்ந்து எங்களின் இலக்கு வெற்றியை நோக்கி செல்வதற்கு பெரும் ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் சீருடை தொடங்கி பள்ளி கட்டணம் வரை சிந்திக்கும் நிலையில் இவ்வியக்கத்தின் முன்னெடுப்பால்,அந்த கவலையெல்லாம் இல்லாமல் நிம்மதி பெரும் மூச்சு விடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வீ.சின்னராஜூவின் இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினால் இவட்டார தமிழ்ப்பள்ளிகள் சிறப்பாக இயங்குவதாகவும் அவ்வியக்கத்தின் இந்த அரும் சேவை தொடர வேண்டும் எனவும் கூறியதோடு தங்களின் நன்றியையும் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles