
சுங்கை சிப்புட்,மே 20: ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி தலைவருக்கான தேர்தலில் பெரும்பான்மை கிளைத்தலைவரின் ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றிருந்த ஶ்ரீ தாமான் கிளையின் தலைவர் சமூக சேவையாளர் வீ.சின்னராஜூ அமோக வெற்றி பெற்றார்.
நேற்று நடைபெற்ற அத்தொகுதி தலைவருக்கான போட்டியில் இடைக்கால தலைவர் அஜாட் கமாலுடினை எதிர்த்து களமிறங்கிய சின்னராஜூ மிக எளிதாக வெற்றி பெறுவார் என தொடக்கத்திலேயே கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுங்கை சிப்புட் தொகுதியில் சிறந்த சேவையாளராகவும் மொழி,இன உணர்வாளராகவும் அனைவராலும் மதிக்கப்படும் சின்னராஜூ ஒட்டுமொத்த ம இ கா கிளைத்தலைவர்களின் ஆதரவையும் பேராளர்களின் நம்பிக்கையையும் பெற்று 23 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நடைபெற்ற தேர்தலில் சின்னராஜூ 31 வாக்குகள் பெற்ற வேளையில் அஜாட் கமலூடின் அவர்களுக்கு 8 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
முன்னதாக,அஜாட் கமலூடின் அணியில் துணைத்தலைவருக்கு போட்டியிட்ட நபர் இறுதிநேரத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதால், சின்னராஜூவின் அணியில் துணைத்தலைவருக்கு போட்டியிட்ட அசோக்குமார் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேவேளையில்,நிரந்திர தலைவராக ஜெயகோபி தேர்வான நிலையில் சுங்கை சிப்புட் தொகுதியின் இளைஞர் பகுதி தலைவராக சந்திரசேகரனும் மகளிர் தலைவியாக திருமதி.சரோஜாவும் போட்டியின்றி தேர்வாகியிருந்தனர்.
அமோக வெற்றி பெற்று தொகுதி தலைவராக தேர்வு செய்யப்பட்ட வீ.சின்னராஜூ சுங்கை சிப்புட் தொகுதியில் பல்வேறு உருமாற்றங்களை கொண்டு வர இலக்கு கொண்டிருப்பதாக கூறினார்.சுங்கை சிப்புட் தொகுதியை மீண்டும் ம இ காவின் வலுவான கோட்டையாக உருவாக்குவதும் அதில் அடங்கும் என்றார்.

