
ஈப்போ, ஜூன் 1: ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புந்தோங் சட்டமன்ற தொகுதியில் மழை காலங்களில் இங்குள்ள சுங்கை பாரி ஆற்றில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல்லாண்டுகளாக பெரும் பிரச்சினையாக உருவாகி வருவதாக சட்டத்துறை துணையமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அரசு துறையுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக, இந்த சுங்கை பாரி ஆற்றில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க சுமார் 5 கிலோ மீட்டருக்கு இந்த ஆறு அகலப்படுத்தவுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த ஆறு ஆழப்படுத்தப்படவும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன என்று அவர் அவர் குறிப்பிட்டார்.
இங்கு வெள்ளம் ஏற்படுவதால் இந்த ஆற்றை ஒட்டுயே அமைந்த சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ புத்ரி பெண்கள் இடைநிலைப் பள்ளியும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது. இதனால் மாணவர்கள் கல்வியில் கற்றல் கற்பித்தலில் கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆற்றை ஒட்டியே குடியிருப்பு பகுதிகளான தாமான் வீடுகள், கம்பத்து வீடுகள் மற்றும் லோட்டு வீடுகளின் குடியிருப்பாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு தீர்வாக இத்திட்டம் அமையும் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்த ஆற்றில் நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த பாதள சாக்கடைகள் மற்றும் தண்ணீர் ” பம்ப்” இருந்த போதும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியவில்லை என்று அவர் எடுத்துரைத்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக எம்.குலாவின் சிறப்பு அதிகாரி எம்.இந்திரன் சம்பந்தப்பட்ட இடத்துற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு தீர்வுக்கான திட்டங்கள் குறித்து தெளிவாக விவரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

